குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கைகள், கருவிகளுடன் வேலை செய்யும் கலைஞர்கள், கைவினைஞர்களுக்குப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஆதரவளிக்கிறது
Posted On:
18 DEC 2023 4:12PM by PIB Chennai
கைகள், கருவிகளுடன் வேலை செய்யும் கலைஞர்கள், கைவினைஞர்களுக்குப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஆதரவளிக்கிறது. இதற்கான திட்டம் 17.09.2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாரம்பரியக் கலைஞர்கள், 'விஸ்வகர்மாக்கள்' என்று குறிப்பிடப்படுகிறார்கள். கொல்லர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், தச்சர்கள், சிற்பிகள் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் விஸ்வகர்மாக்கள் ஆவார்கள்.
இத்திட்டம் 18 தொழில்களில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள், கைவினைஞர்களை உள்ளடக்கியது. தச்சர், படகு கட்டுபவர், கவசத் தயாரிப்பாளர், கொல்லர், சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பாளர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, காலணி தயாரிப்பாளர், செருப்பு தைப்பவர், மேஸ்திரி, கூடை, பாய், / துடைப்பம் தயாரிப்பாளர் / கயிறு திரிப்பவர், பொம்மை தயாரிப்பாளர், முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளி, தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பாளர் உள்ளி்ட்டோர் விஸ்வகர்மாக்கள்.
இத்திட்டத்தின் பயன்கள் பின்வருமாறு:
அங்கீகாரம்: பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை அங்கீகரித்தல்.
திறன் மேம்பாடு: 5-7 நாட்கள் அடிப்படை பயிற்சி மற்றும் 15 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மேம்பட்ட பயிற்சி, ஒரு நாளைக்கு ரூ.500 உதவித்தொகையுடன்.
உபகரண ஊக்கத்தொகை: அடிப்படை திறன் பயிற்சியின் தொடக்கத்தில் இ-ரசீதுகள் மூலம் ரூ.15,000 வரை உபகரண ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கடன் உதவி: ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வரை முறையே 18 மாதங்கள், 30 மாத கால அவகாசத்துடன் ரூ.3 லட்சம் வரை பிணையில்லா 'நிறுவன மேம்பாட்டுக் கடன்கள்' 5% சலுகை வட்டி விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு, 8% வரை மத்திய அரசின் மானியம் வழங்கப்படுகிறது. அடிப்படை பயிற்சியை முடித்த பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். முதல் தவணையைப் பெற்று, நிலையான கடன் கணக்கைப் பராமரித்து, தங்கள் வணிகத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பின்பற்றிய அல்லது மேம்பட்ட பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு இரண்டாவது கடன் தவணை கிடைக்கும்.
2023-2024-ம் நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.13,000 கோடியாகும்.
2023-ம் நிதியாண்டில் (12.12.2023 நிலவரப்படி), பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் திட்ட நன்மைகளைப் பெறுவதற்காக பிரதமரின் விஸ்வகர்மா தளத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
----
(Release Id: 1987716)
ANU/SMB/IR/KPG/KRS
(Release ID: 1987854)
Visitor Counter : 146