பாதுகாப்பு அமைச்சகம்

மனங்களின் போர் என்ற ராணுவ விநாடி வினா போட்டி இறுதிச் சுற்றுடன் தில்லியில் நிறைவு பெற்றது

Posted On: 03 DEC 2023 7:08PM by PIB Chennai

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "மனங்களின் போர் - இந்திய ராணுவ விநாடி வினா - 2023" என்ற போட்டியை ராணுவம் நடத்தியது. இந்தப் போட்டி இன்று ( 3 டிசம்பர் 2023) தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியுடன் நிறைவடைந்தது. நான்கு மாத காலம் பள்ளிகளுக்கிடையேயான விநாடி-வினா போட்டியாக இது நடைபெற்றது. நாடு முழுவதும் 32,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் பங்கேற்றன. 'பேட்டில் ஆஃப் மைண்ட்ஸ்' – என்ற பெயரில் மனங்களின் போர் என்ற பொருளில் நடத்தப்பட்ட இந்த ராணுவ விநாடி வினாப் போட்டியின் இறுதிச் சுற்றில், வாரணாசியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது.

இந்நிகழ்ச்சியில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, ராணுவத்தினரின் மனைவியர் நலச் சங்கத்தின் தலைவர் திருமதி அர்ச்சனா பாண்டே ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டினார். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கார்கில் வெற்றி தினத்தின் 25 வது ஆண்டு கொண்டாட்டங்களை நினைவுகூரும் பல்வேறு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த விநாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது தொடங்கியது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் 32,441 பள்ளிகள் பதிவு செய்தன. நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போட்டி இணையதளம் மற்றும் நேரடிப் போட்டி என பல சுற்றுகளை உள்ளடக்கியதாக அமைந்தது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட நான்கு மாணவர்கள் கொண்ட அணிகள் பங்கேற்றன.

நாடு முழுவதும் 12 இடங்களில் நேரடிப் போட்டிகள் நடத்தப்பட்டன. 12 முன்னணி அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டன. இன்று புது தில்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் உட்பட சுமார் 800 பேர் பங்கேற்றனர்.

*******

ANU/AD/PLM/DL



(Release ID: 1982168) Visitor Counter : 66


Read this release in: Marathi , English , Urdu , Hindi