மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் தயார் நிலையை ஆய்வு செய்ய தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 03 DEC 2023 7:26PM by PIB Chennai

வங்கக் கடலில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைகளின் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு (என்சிஎம்எசி - NCMC) கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தலைமை இயக்குநர், ‘மிக்ஜாம்’ புயலின் தற்போதைய நிலை குறித்து குழுவிடம் விளக்கினார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான இந்தப் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை 04:30 மணி நிலவரப்படி புதுச்சேரிக்கு, கிழக்கு-தென்கிழக்கே சுமார் 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நெல்லூருக்கு தென்-தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் பாபட்லாவில் இருந்து 490 கிலோ மீட்டர் தெற்கு- தென்கிழக்கிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து 500 கிலோ மீட்டர் தெற்கு- தென்கிழக்கிலும் இந்தப் புயல் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, டிசம்பர் 4-ம் தேதி முற்பகலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகக் கடற்கரையை ஒட்டி மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, வடக்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்குச் சென்று, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை அடைந்து டிசம்பர் 5-ம் தேதி காலை ஒரு தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது 110 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடும். 

 

 

இது தொடர்பாக இன்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சரவைச் செயலாளர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை உரிய நேரத்தில் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு, ஒடிசா, புதுச்சேரியின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சிறப்புத் தலைமைச் செயலாளர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அவர்கள் குழுவிடம் விளக்கினர். தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, நிவாரண மையங்களில் மக்களைத் தங்க வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. எஸ்எம்எஸ் மற்றும் வானிலை அறிவிப்புகள் மூலம் உள்ளூர் மொழிகளில் எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன. கடலில் இருந்த மீனவர்கள் மற்றும் படகுகள் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகங்கள் 24 மணி நேரக் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளன.  நிலைமையை கண்காணிக்க போதுமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் 21 குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக 8 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மத்திய அமைப்புகள் மற்றும் அரசுகளின் ஆயத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சரவைச் செயலாளர், அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர்ச் சேதங்களைத் தவிர்ப்பதையும், உள்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.  உள்ளூர் மொழிகளில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றின் பணியாளர்கள், படகுகள், மற்றும் கப்பல்கள் ஆகியவற்றை உடனடியாக ஆபத்து இல்லாத பகுதிக்கு மாற்ற அமைச்சரவை செயலாளர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்குத் தேவையான அளவு தேசியப் பேரி்டர் மீட்புக் குழுக்கள் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என்றும், அனைத்து மத்திய அமைப்புகளும் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

கூட்டத்தில், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் புதுச்சேரியின் தலைமைச் செயலாளர், ஆந்திர மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சிறப்பு தலைமைச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், மீன்வளத் துறைச் செயலாளர், மின்துறைச் செயலாளர், துறைமுகம், கப்பல் துறை செயலாளர், தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேசியப் பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

*******

ANU/AD/PLM/DL



(Release ID: 1982165) Visitor Counter : 120