ஜவுளித்துறை அமைச்சகம்
சர்வதேசப் பருத்தி ஆலோசனைக் குழுவின் 81-வது முழுக் கூட்டத்தை ஜவுளி அமைச்சகம் மும்பையில் டிசம்பர் 2 தொடங்கி 5 வரை நடத்த உள்ளது
Posted On:
29 NOV 2023 5:03PM by PIB Chennai
சர்வதேசப் பருத்தி ஆலோசனைக் குழுவின் 81 வது முழுக் கூட்டத்தை மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 2023 டிசம்பர் 2 முதல் 5 வரை நடத்த உள்ளது. ஜவுளி ஆணையர் அலுவலகம், இந்தியப் பருத்திக் கழகம், இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, இந்தியப் பருத்தி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இதனை நடத்துகிறது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டத்தை நடத்துவது இந்தியாவுக்குப் பெருமையாகவும் உள்ளது.
மத்திய ஜவுளி, வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2023, டிசம்பர் 2 அன்று பிற்பகல் 02:00 மணிக்கு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் இந்த கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். 4 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு பருத்தி சாகுபடி செய்யும் மற்றும் பயன்படுத்தும் நாடுகள், பிராந்தியங்களைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகள், புகழ்பெற்ற தொழிலதிபர்கள், முக்கிய வணிக பிரதிநிதிகள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2019 க்குப் பின் இது முதலாவது தனிப்பட்ட முழுக் கூட்டம் ஆகும். இதற்கு முன் 2015-ம் ஆண்டு மதிப்புக் கூட்டலை மையமாகக் கொண்டு "பண்ணையிலிருந்து துணி வரை: பருத்தியின் பல முகங்கள்" என்ற கருப்பொருளுடன் இந்தியா இந்தக் கூட்டத்தை நடத்தியது.
நான்கு நாள் முழுக் கூட்டத்திற்குப் பின், ஆர்வமுள்ள பிரதிநிதிகளுக்கு 2023 டிசம்பர் 6 முதல் 8 வரை ஜவுளி நகரமான அகமதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தொழில்நுட்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை 10,000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களுடன் நடைபெற உள்ள உலகின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சியான பாரத் டெக்ஸ் 2024-ஐ நடத்த இந்தியா தயாராகி வருகிறது.
***
ANU/SMB/IR/RR/KPG
(Release ID: 1980875)
Visitor Counter : 114