தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
துருக்கியில் குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தைத் திருமணப் பிரச்சினையை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல 'செலின்' படம் முயற்சிக்கிறது: இயக்குநர், துஃபான் சிம்செக்கன்
துருக்கி திரைப்படமான 'செலின்' பற்றி அதன் இயக்குனர் துஃபான் சிம்செக்கான் கூறுகையில், "துருக்கியில் கிராமப்புற இளம் பெண்களின் மோசமான நிலையிலிருந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்கான உத்வேகம் வந்தது. அங்கு அவர்கள் வயல்களில் வேலை செய்து சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்" என்றார். 54-வதுஇந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா என்ற பிரிவின் கீழ் இப்படம் திரையிடப்பட்டது.
பிஐபி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிம்செக்கான், "குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் போன்ற நடைமுறைகளால் துருக்கியில் கிராமப்புற பெண்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. இது உலகின் மற்ற பகுதிகளுடனும் எதிரொலிப்பதால் இந்தப் பிரச்சினையை உலகளாவிய மேடையில் எடுத்துரைக்க விரும்புகிறேன்" என்றார்.
படத்தை உருவாக்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிம்செக்கன், படத்தின் உண்மையான சாராம்சத்தை வெளிக்கொணர படத்தின் நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களை அதன் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவது ஒரு சுவாரஸ்யமான செயல்முறை என்று கூறினார். "ஹங்கேரிய இயக்குனர்கள் மற்றும் குழந்தைகளுடன் பணிபுரிவதற்கான அவர்களின் அணுகுமுறை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். இது இந்த படத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
துருக்கிய நாட்டுப்புற இசை படத்தின் இன்றியமையாத அங்கமாக அமைகிறது மற்றும் பார்வையாளருக்கு துருக்கிய கலாச்சாரத்தின் ஒரு பார்வையை அளிக்கிறது என்று சிம்செக்கான் மேலும் கூறினார்.
துருக்கியின் பல கிராமப்புறங்களில் பெண்கள் கடுமையாக சுரண்டப்படுவதையும், பாலின சமத்துவம் என்ற கருத்தையும் இந்த படம் பேசுகிறது என்று தயாரிப்பாளர் மெஹ்மத் சரக்கா மேலும் கூறினார். "திரைப்படத் தயாரிப்பின் போது, பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பல திட்டங்களில் பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம் உலகளாவிய தளத்தை அடைய முயற்சிக்கிறோம்" என்றார்.
செலின்திரைப்படம் ஒரு கூடார நகரத்தில் வசிக்கும் பருவகால விவசாயத் தொழிலாளியான அதே பெயரைக் கொண்ட பதினான்கு வயது கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அவளுடைய ஒரே கனவு பள்ளிக்குச் செல்வதுதான், ஆனால் அது சாத்தியமற்றது என்று அவளுக்குத் தெரியும். பில்கே என்ற ஆவணப்படத் தயாரிப்பாளர் கூடார நகரத்திற்கு வருகிறார், இதுசெலின்மற்றும் முழு சமூகத்தையும் பாதிக்கும் ஒரு உருமாற்ற சம்பவத்தைத் தொடர்கிறது.
******
AD/SMB/KRS
(Release ID: 1980248)