குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உலகளாவிய தெற்கு நாடுகளுக்குக் காலனித்துவ சட்டங்களின் பாரம்பரியம் மிகவும் சுமையாக இருப்பதாகக் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்
Posted On:
27 NOV 2023 2:09PM by PIB Chennai
காலனித்துவ சட்டங்களின் பாரம்பரியம் உலகளாவிய தெற்கு நாடுகளில் பாதிக்கப்படும் பிரிவினருக்கு மிகவும் சுமையாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர் இன்று எடுத்துரைத்தார். இந்தச் சட்டங்கள் உள்ளூர் மக்களுக்கு மிகவும் கடுமையானவை, அடக்குமுறையானவை மற்றும் சுரண்டுபவை என்று தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் உலகளாவிய தெற்கு நாடுகள் இந்தியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, உள்ளூர் மக்களுக்கு எதிரான பாரபட்சத்தை நிலைநிறுத்தும் பழைய காலனித்துவ சட்டங்களை மறுஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, 'உலகளாவிய தெற்கு' என்ற வார்த்தையைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இதை மையக் கட்டத்திற்குக் கொண்டு வருவதற்கும், முக்கியமாக வளர்ந்த நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மன்றத்தில் அதை நிலைநிறுத்துவதற்கும் இந்தியப் பிரதமருக்கு நிறைய துணிச்சல் தேவைப்பட்டது. ஆனால் ஜி 20-ல் ஆப்பிரிக்க ஒன்றியத்தை சேர்ப்பதன் மூலம் அவருக்கு வெற்றி கிடைத்தது என்று அவர் கூறினார்.
"பாதிக்கப்படுவோருக்குத் தரமான சட்ட உதவி கிடைப்பதை உறுதிசெய்தல்: உலகளாவிய தெற்கின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்" என்ற முதல் பிராந்திய மாநாட்டில் திரு தன்கர் உரையாற்றினார். இந்த மாநாட்டை இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம், சர்வதேச சட்ட அறக்கட்டளை, யுஎன்டிபி யுனிசெப் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
நீதி அமைப்புக்கான அணுகல் இல்லாமை, சட்ட உதவி மறுக்கப்படுவது ஆகியவை பாதிக்கப்படும் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு இருத்தலியல் சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்தச் சவால்களை நாம் உறுதியான கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் தடுக்க வேண்டும்.அவர்களுக்கு நீதியைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
"உலகளாவிய தெற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும்போது, கடந்த காலத்தின் காலனித்துவ தளைகளை அகற்றி, அநீதி மற்றும் சமத்துவமின்மையை நிலைநிறுத்திய வரலாற்றுத் தவறுகளை மாற்றியமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவது கட்டாயமாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.
காலாவதியான சட்டங்களை மறுஆய்வு செய்யும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு தன்கர், இது நமது கண்ணோட்டத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், அந்தச் சுரண்டல் விதிகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும், அழிக்கும் என்றும் தெரிவித்தார். "உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் இந்தப் பகுதிகளில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையை உன்னிப்பாக ஆராய்ந்து, பொருத்தமான தனிப்பயனாக்கலுக்குப் பிறகு அவற்றைத் தங்கள் நாடுகளுக்குப் பயன்படுத்துவது நல்லது" என்று அவர் யோசனை தெரிவித்தார்.
வசுதைவ குடும்பகம் என்ற இந்தியாவின் நெறிமுறைகள் இப்போது ஒரு கள யதார்த்தமாக மாறியுள்ளன என்று கூறிய திரு தன்கர், "உலகளாவிய தெற்கின் எழுச்சி உலகிற்கு மிகப்பெரிய நிலைக்கும் சக்தியாக இருக்கும். அது உலகின் வளர்ச்சி பாதையை உருவாக்கும்" என்றார்.
"அடிப்படை மனித விழுமியங்களை வளர்ப்பதற்கும், சமத்துவமான சமூகங்களை வளர்ப்பதற்கும் சட்ட உதவி மற்றும் நீதி அமைப்புக்கான அணுகல் இன்றியமையாதது" என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவின் விளிம்புநிலை சமூகங்களுக்கான அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் குறைந்த செலவிலான சட்ட உதவியின் கலங்கரை விளக்கமாக நல்சாவைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், நீதி வழங்கலின் நல்சா மாதிரி, உலகளாவிய தெற்கு நாடுகளால் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், நல்சா அமைப்பின் துணைத் தலைவருமான திரு டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதியும், நல்சா அமைப்பின் செயல் தலைவருமான நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜு ன் ராம் மெக்வால், உச்ச நீதிமன்ற நீதிபதியும், உச்ச நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான திரு சஞ்சீவ் கன்னா, இந்திய ஜி 20 ஷெர்பா திரு அமிதாப் காந்த், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர் வெங்கட்ரமணி, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற பார் ஆஃப் அசோசியேஷன் தலைவர் திரு ஆதிஷ் அகர்வாலா, நீதித் துறை செயலாளர் திரு எஸ்.கே.ஜி ரதி மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
***
PKV/SMB/KRS
(Release ID: 1980198)
Visitor Counter : 139