மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஒரே பாரதம் உன்னத பாரதம் முன்முயற்சியின் கீழ் யுவ சங்கத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வுகளை மத்தியக் கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது
Posted On:
25 NOV 2023 1:05PM by PIB Chennai
மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 மாணவர்களைக் கொண்ட குழு, கலாச்சார மற்றும் கல்வி சுற்றுப்பயணத்திற்காக மேற்கு வங்கத்திற்குச் சென்றது. இதன் மூலம் யுவ சங்கம் எனப்படும் இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் 3வது கட்டத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம் முன்முயற்சியின் கீழ் யுவ சங்கம் நடத்தப்படுகிறது.
அனுபவக் கற்றலை ஊக்குவிக்கவும், நமது நாட்டின் வளமான பன்முகத்தன்மையை இளைஞர்களுக்குத் தெரியப்படுத்தவும் யுவ சங்கம் எனப்படும் இந்த இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வாழ்க்கையின் தனித்துவமான அம்சங்கள், வளர்ச்சி அடையாளங்கள், கட்டடக்கலை மற்றும் பொறியியல் அதிசயங்கள், தொழில்துறை முன்னேற்றம் மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும் மாநிலத்தின் அண்மைக்கால சாதனைகள் குறித்த ஒரு அனுபவத்தை வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
யுவசங்கத்தின் தற்போதைய கட்டத்தின் ஒரு பகுதியாக, 2023 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் முழுவதும் சுற்றுலாக்கள் நடத்தப்படும். இதில் முக்கியமாக உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் குறிப்பிட்ட பிற மாநிலங்களுக்கு பயணம் செய்வார்கள். அவர்களின் பயணத்தின்போது, அந்த மாநிலப் பிரதிநிதிகள் அவர்களை வரவேற்று சுற்றுலா, மரபுகள், வளர்ச்சி, தொழில்நுட்பம், மக்களுக்கு இடையிலான இணைப்பு குறித்து அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள். யுவ சங்கத்தின் 3-வது கட்டத்தில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் பங்கேற்பு இருக்கும். இதில் திருச்சி ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
2000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற யுவ சங்கத்தின் முதல் இரண்டு கட்டங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததைப் பார்க்கும்போது, மூன்றாம் கட்டமும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****
ANU/PKV/PLM/DL
(Release ID: 1979738)
Visitor Counter : 84