சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய சட்ட நிறுவனத்துடன் இணைந்து அரசியல் சாசன தினத்தை நாளை கொண்டாடுகிறது - விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் கலந்து கொள்கிறார்

Posted On: 25 NOV 2023 12:08PM by PIB Chennai

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், இந்திய சட்ட நிறுவனத்துடன் இணைந்து நாளை (26.11.2023) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அரசியல் சாசன தினத்தைக் கொண்டாடுகிறது. 1949-ம் ஆண்டு இதே நாளில்தான் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஐந்து தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்ட தேசிய அளவிலான உருமாற்ற கலந்துரையாடல், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். 2047-ம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வையில் கவனம் செலுத்தி, நமது சட்டங்களின் மறுசீரமைப்புக்கான தேவைகளைப் பற்றி இதில் விவாதிக்கப்படும். சட்ட வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதில் பங்கேற்பார்கள். 

அரசியலமைப்பின் மதிப்புகள், உலகளாவிய எதிர்பார்ப்புகள், உலகில் உள்ள அனைவரின் நலவாழ்வு ஆகியவற்றுக்கு இடையிலான முக்கியமான தொடர்பை ஆராய்வதையும் இந்த கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால், சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு ரிது ராஜ் அவஸ்தி, சொலிசிட்டர் ஜெனரல் திரு எல்.டி.துஷார் மேத்தா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு அருண்குமார் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்திரா பானர்ஜி, மத்திய அரசின் சட்டத் துறைச் செயலாளர் டாக்டர் நிதின் சந்திரா ஆகியோரும் இதில் உரையாற்றுகின்றனர்.

'மாற்றுத் தீர்வுக்கான வழிகாட்டி', 'அரசியலமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்த பார்வைகள்' என்ற இரண்டு புத்தகங்களும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளன. அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்காக 'சுதந்திரத்திற்கான வரம்புகள் - அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள்' என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  விவாதத்தில் முதல் பரிசை வெல்பவருக்கு ரூ. 50,000-மும் இரண்டாம் பரிசை வெல்பவருக்கு ரூ. 30,000-மும் வழங்கப்படும். மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ. 20,000 வழங்கப்படும். 

*****

ANU/PKV/PLM/DL


(Release ID: 1979731) Visitor Counter : 99