பாதுகாப்பு அமைச்சகம்
17-வது இந்திய - நேபாள கூட்டு ராணுவப் பயிற்சி சூரிய கிரண் பித்தோராகரில் தொடங்கியது
Posted On:
24 NOV 2023 3:29PM by PIB Chennai
சூர்ய கிரண் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக 334 பேர் கொண்ட நேபாள ராணுவக் குழு இந்தியா வந்தது. உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற உள்ளது. இது ஒரு வருடாந்திர நிகழ்வாகும், இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது.
354 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் பிரிவு குமாவுன் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு பட்டாலியன் தலைமையில் செயல்படுகிறது. நேபாள ராணுவப் பிரிவை தாரா தால் பட்டாலியன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
காடுகளில் போர், மலைப்பிரதேசங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
ட்ரோன்களைப் பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவப் பயிற்சி, விமான அம்சங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம், துருப்புக்கள் தங்கள் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவார்கள். அவர்களின் போர்த் திறன்களை மேம்படுத்துவார்கள் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் அவர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவார்கள்.
இந்தப் பயிற்சி, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு யோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது. சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் செயல்பாட்டு நடைமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கவும் இது உதவும்.
சூரிய கிரண் பயிற்சி என்பது இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே நிலவும் நட்பு, நம்பிக்கை, பொதுவான கலாச்சார இணைப்புகளின் வலுவான பிணைப்பைக் குறிக்கிறது. இது பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்கி இரு நாடுகளின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இரு நட்பு நாடுகளுக்கு இடையே பகிரப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களை அடைவதையும் இருதரப்பு உறவுகளை வளர்ப்பதையும் இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
ANU/SMB/PKV/RR/KPG
(Release ID: 1979496)
Visitor Counter : 241