பாதுகாப்பு அமைச்சகம்

கிழக்கு தைமூர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்

Posted On: 17 NOV 2023 6:22PM by PIB Chennai

இந்தோனேசியா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (17.11.2023) ஜகார்த்தாவில், கிழக்கு தைமூர் (திமோர்-லெஸ்தே) நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர்  திரு டோனாசியானோ டோ ரொசாரியோ டா கோஸ்டா கோம்ஸுடன்  இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு தைமூரின் வளர்ச்சிக்கு, குறிப்பாக பாதுகாப்புத் துறையில் அந்நாட்டின்  தேவைகளுக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று திரு ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்புத் தளவாடங்களை வழங்குதல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உள்ளிட்டவற்றில் எதிர்கால ஒத்துழைப்பிற்கான சாத்தியகூறுகள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
கிழக்கு தைமூரில் ஒரு தூதரகத்தைத் திறக்கும் இந்தியாவின் முடிவை அந்நாட்டு  அமைச்சர் வரவேற்றார். ஆசியான் அமைப்பில் முழு உறுப்பினராகும் கிழக்கு தைமூரின் முயற்சிகளுக்கு இந்தியா அளித்த ஆதரவுக்காக அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர், ஜகார்த்தாவில் உள்ள பல்வேறு இந்திய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட இந்திய சமூகத்தினருடன் திரு ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். டிஜிட்டல் இந்தியா, புதிய கல்விக் கொள்கை, மகளிர் மேம்பாடு, ஜல் ஜீவன் இயக்கம், கிராமப்புற சாலை இணைப்பு, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் போன்ற திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் மூலம் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார். ஜகார்த்தாவில்  ப்ளூயிட் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கும் திரு ராஜ்நாத் சிங் சென்று வழிபாடு நடத்தினார்.
நேற்று (16.11.2023) ஜகார்த்தாவில் நடைபெற்ற 10 வது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.


*******


(Release ID: 1977702)
ANU/PKV/PLM/AG/KRS



(Release ID: 1977719) Visitor Counter : 64


Read this release in: English , Urdu , Marathi , Hindi