பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் 15பி திட்டத்தின் "சூரத்" போர்க்கப்பலின் சின்னம் அறிமுக விழா
Posted On:
05 NOV 2023 11:30AM by PIB Chennai
இந்திய கடற்படையின் சார்பில், உள்நாட்டில் கட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான 'சூரத்' கப்பலின் சின்னம் நாளை (06-11-2023) சூரத் நகரில் நடைபெறும் விழாவில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் முன்னிலையில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேலால் அறிமுகம் செய்து வெளியிடப்படவுள்ளது. முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்தப் போர்க்கப்பலை 2022-ம் ஆண்டு மும்பையில் தொடங்கி வைத்தார்.
முன்னணி 'போர்க்கப்பல் திட்டமான 'புராஜெக்ட் 15 பி' திட்டத்தில் நான்கு அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் 'சூரத்' நான்காவது மற்றும் கடைசி கப்பல் ஆகும். இந்த போர்க்கப்பலின் கட்டுமானம் உள்நாட்டு அதிநவீன போர்க்கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்துக்கு சான்றாக உள்ளது.
சூரத் நகரம் 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவிற்கும் பல நாடுகளுக்கும் இடையிலான மிக முக்கியமான கடல் வணிக இணைப்பாக இருந்தது. இந்த நகரம் கப்பல் கட்டும் நடவடிக்கைகளுக்கான செழிப்பான மையமாகவும் இருந்தது. பல இந்திய கடற்படை கப்பல்களுக்கு நம் நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. எனவே இந்திய கடற்படை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட அண்மைக் கால போர்க்கப்பலுக்கு சூரத் நகரத்தின் பெயரைச் சூட்டியுள்ளது.
****
PLM/DL
(Release ID: 1974896)
Visitor Counter : 111