ஆயுஷ்

'ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்' என்ற கருப்பொருள் செய்தியுடன் நாடு தழுவிய இருசக்கர வாகனப் பேரணி 11 நகரங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது

Posted On: 05 NOV 2023 6:44PM by PIB Chennai

'ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்' என்ற உலகளாவிய கருப்பொருள் செய்தியுடன் நாடு முழுவதும் 11 நகரங்களில் இருசக்கர வாகனப் பேரணி இன்று (05-11-2023) வெற்றிகரமாக நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து இளைஞர்கள் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பங்கேற்றனர். ஆயுர்வேதத்தை தங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகக் கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த பேரணிகளின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை ஆயுர்வேத தின கொண்டாட்டங்களில் இணைப்பது மற்றும் ஆயுர்வேதத்தின் வளமான பாரம்பரியத்தை ஊக்குவிப்பதாகும்.

புதுதில்லி, லக்னோ, நாக்பூர், சென்னை, ஜெய்ப்பூர், பாட்டியாலா, குவாலியர், ஹைதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம், அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆயுர்வேத தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் இந்த நாடு தழுவிய இருசக்கர வாகனப் பேரணி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் மனதில் ஆயுர்வேதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.

ஆயுர்வேத தினம் நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஹரியானாவின் பஞ்ச்குலாவில் 2023 நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஆயுஷ் அமைச்சகத்தால் ஆயுர்வேத தின சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

****

PLM/DL(Release ID: 1974894) Visitor Counter : 71


Read this release in: Hindi , Urdu , English , Marathi