மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஆஸ்திரேலியா - இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சிலின் (ஏஐஇஎஸ்சி) கூட்டம் நாளை காந்திநகர் ஐஐடி-யில் நடைபெறுகிறது
Posted On:
05 NOV 2023 3:11PM by PIB Chennai
காந்திநகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) ஆஸ்திரேலியா இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சில் (ஏஐஇஎஸ்சி) கூட்டம் நாளை (06-11-2023) நடைபெறுகிறது. ஏஐஇஎஸ்சி, முன்பு ஆஸ்திரேலிய இந்திய கல்வி கவுன்சில் (ஏஐஇசி) என இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக 2011-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த மன்றத்தின் நோக்கம் இரு நாடுகளின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டது.
கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஒரே நிறுவன மன்றத்தின் கீழ் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாகும். கல்வி மற்றும் திறன் துறையில் பரஸ்பர ஆர்வமுள்ள முக்கியமான பகுதிகளில் ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பை இந்தக் கூட்டம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஆஸ்திரேலிய அரசின் கல்வி அமைச்சர் திரு ஜேசன் கிளேர், ஆஸ்திரேலிய அரசின் திறன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் திரு பிரெண்டன் ஓ'கானர் ஆகியோர் கூட்டாக இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்கள்.
இரு நாடுகளிலும் கல்வி மற்றும் திறன்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கத்துடன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க கல்வி மற்றும் திறன் வல்லுநர்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு தளத்தை வழங்கும். எதிர்காலத்துக்கு ஏற்ற திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குதல், கல்வியில் நிறுவன கூட்டுச் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், சர்வதேசமயமாக்கல் மூலம் ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
****
PKV/PLM/DL
(Release ID: 1974870)
Visitor Counter : 106