பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியக் கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு சந்திப்பு நடைபெற்றது

Posted On: 04 NOV 2023 4:50PM by PIB Chennai

இந்தியா மற்றும் இலங்கையின் கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையே  33வது வருடாந்திர சர்வதேச கடல் எல்லைக் கூட்டம்  ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பாக் நீரிணைப் பகுதியில் கோடியக்கரைக்கு அருகிலுள்ள இந்திய - இலங்கைக் கடல் எல்லைக் கோட்டில் வெள்ளியன்று  நடைபெற்றது. இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் தலைமைக் குழுக்களுக்கு இடையேயான தொடர்பையும்  உறவுகளையும் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பையும்  மேம்படுத்த இது ஒரு வாய்ப்பாக  அமைகிறது.

இலங்கைக் கடற்படையின் வடமத்திய கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் பி.ஏ கே.எஸ் பனகொட தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின்  கொடி அதிகாரி ரவி குமார் திங்ரா தலைமையிலான இந்திய தூதுக்குழுவினர், கடலோரக் காவல்படை பிராந்திய தலைமையகத்தின் (கிழக்கு) பிரதிநிதி, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின்  பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது பாக் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு, தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் விவாதித்தனர். தற்போதுள்ள தகவல் தொடர்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் இரு கடற்படைகள் மற்றும் கடலோரக்  காவல்படை இடையே சரியான நேரத்தில் தகவல்களைப் பகிர்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர்.

****  

PKV/SMB/DL



(Release ID: 1974721) Visitor Counter : 87


Read this release in: English , Urdu , Marathi , Hindi