பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

புதியவகை எரிபொருட்களை அறிமுகப்படுத்துவது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கிறது: பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி

Posted On: 26 OCT 2023 3:37PM by PIB Chennai

"இந்தியன் ஆயிலின் பாரதீப் மற்றும் பானிபட் சுத்திகரிப்பு நிலையங்கள், இந்தியன் ஆயிலின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள அறிவுசார் திறமையைப் பயன்படுத்தி, புதிய எரிபொருட்களை அறிமுகப்படுத்தியிருப்பது ஒரு எழுச்சிமிகு சாதனையாகும்" என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருட்களை' அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஹர்தீப் சிங் பூரி , இந்த நடவடிக்கை நமது உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனைப் பறைசாற்றுகிறது, இது இந்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்றார்.   பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை வளர்ப்பதற்கான மற்றொரு முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார்.

 

கேஸோகாலின் மற்றும் டீசல் எரிபொருட்களின் உற்பத்தியில் இந்தியா நுழைவது இதுவே முதல் முறை என்று அமைச்சர் கூறினார். சர்வதேச அளவுகோல்களுக்கு ஏற்ப உள்நாட்டில் இந்தத் தயாரிப்புகளை உருவாக்குவது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இடைவிடாத கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தச் சாதனை இறக்குமதியில் இந்தியாவின் சார்புநிலையைக் குறைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எரிசக்தித் துறையைத் தனித்திறன்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் அளவுக்கு உயர்த்துகிறது என்று அவர் கூறினார்.

 

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பின்பற்றப்படும் நான்கு அம்ச எரிசக்திப் பாதுகாப்பு உத்தி குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பேசினார்.

 

 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'எரிசக்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் உத்திகள் பின்வருமாறு: (1) எரிசக்தி விநியோகங்களை பன்முகப்படுத்துதல் (2) இந்தியாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் தடத்தை அதிகரித்தல் (3) மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் (4) பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எரிசக்தி மாற்றத்தைப் பூர்த்தி செய்தல்.

***

ANU/SMB/PVK/AG/KRS



(Release ID: 1971663) Visitor Counter : 117


Read this release in: English , Urdu , Hindi