பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள தேசிய நல்லாட்சி மையத்தில் தொடங்கப்பட்ட மாலத்தீவு தகவல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கான ஒரு வார திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்; மாலத்தீவைச் சேர்ந்த 26 அரசு ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்
Posted On:
23 OCT 2023 4:25PM by PIB Chennai
மாலத்தீவு தகவல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கான ஒரு வார திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் புதுதில்லியில் உள்ள தேசிய நல்லாட்சி மையத்தில் தொடங்கப்பட்டன. மாலத்தீவைச் சேர்ந்த 26 மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 'வசுதைவ குடும்பகம்' தத்துவத்திற்கு இணங்க, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள அரசு ஊழியர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்காக தேசிய நல்லாட்சி மையம் செயல்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள் நல்ல நிர்வாகத்தை ஊக்குவித்தல், சேவை வழங்குதலை மேம்படுத்துதல், கடைசி நபரை சென்றடைவதன் மூலம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
2022 நவம்பரில் தேசிய நல்லாட்சி மையத் தலைமை இயக்குநருடனான சந்திப்பின் போது, தங்கள் உயர்மட்டக் குழுவுக்குத் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெறும் விருப்பத்தை மாலத்தீவு தகவல் ஆணையம் வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில், மாலத்தீவின் மூத்த அதிகாரிகளுக்கான முதல் நிகழ்ச்சியை என்.சி.ஜி.ஜி ஏற்பாடு செய்துள்ளது. இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் நல்லாட்சிக் கோட்பாட்டிற்கு ஏற்ப உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகளிடையே உரையாற்றிய தேசிய நல்லாட்சி மையத்தின் தலைமை இயக்குநரும், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் துறையின் செயலாளருமான திரு வி ஸ்ரீனிவாஸ், ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படுகின்ற மற்றும் தரமான சேவைகளை அணுகும் சூழலை உருவாக்குவதில் சிவில் ஊழியர்களின் பங்கு குறித்து விளக்கினார். நாட்டின் நிர்வாக சீர்திருத்தப் பயணம் குறித்து ஆழமான விளக்கமளித்தார். மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
தொடக்க விழாவில் பேசிய மாலத்தீவின் ஐ.சி.ஓ.எம் தகவல் ஆணையர் திரு அகமது அஹித் ரஷீத், அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும், இறுதியில் நல்ல நிர்வாகத்திற்கும் பங்களிக்கும் இந்த வாய்ப்பிற்காக இந்திய அரசு மற்றும் என்.சி.ஜி.ஜிக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியத் தகவல் அறியும் உரிமைச் சட்டம், சி.ஐ.சி.யின் பங்கு மற்றும் செயல்பாடுகள், பொது ஆணையத்தின் கடமை, மாநில தகவல் ஆணையத்தின் கடமை - அவற்றின் பங்கு மற்றும் சவால்கள், பொதுத் தகவல் அலுவலர்களின் திறன் மேம்பாடு, வழக்குகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை, மேல்முறையீட்டு செயல்முறை, மேல்முறையீட்டு மேலாண்மை, பொதுமக்களிடையே தகவல் அறியும் உரிமை விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்துவதில் பங்கு போன்ற தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறுகின்றன.
தொடக்க அமர்வில், திட்டத்தின் பாடநெறி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.எஸ்.பிஷ்ட், பாடநெறி இணை ஒருங்கிணைப்பாளர் திரு பிரிஜேஷ் பிஷ்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
***
ANU/AD/SMB/AG/KRS
(Release ID: 1970219)
Visitor Counter : 117