அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட நாடாக இந்தியா இப்போது திகழ்கிறது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 22 OCT 2023 5:43PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட நாடாக இந்தியா இப்போது திகழ்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இந்திய ஒருங்கிணைந்த சேவைகள் நிறுவனம் (யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா -யுஎஸ்ஐ) ஏற்பாடு செய்திருந்த இந்திய ராணுவ பாரம்பரிய விழாவில் திரு ஜிதேந்திர சிங் இன்று (22-10-2023) உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல் அல்லாமல், இப்போது நமது ஆயுதப்படைகள் நவீன ட்ரோன்கள், ஹெலிபோர்ன் செயல்பாடுகள் மற்றும் யுஏவி-க்கள் எனப்படும் ஆளில்லா விமான வாகனங்கள் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன என்று கூறினார். மேலும் குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய அம்சங்களுக்கு ஏற்ப மாறுவதற்கும் நமது ஆயுதப் படைகள் தயாராக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையை மாற்றியமைக்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் முன்னணி நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது என்று அமைச்சர் கூறினார். இது நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையில் உலகளாவிய தொழில்நுட்ப தலைமையிடமாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நமது படைகள் காலாவதியான பழைய ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்த காலம் போய்விட்டது என்று அவர் கூறினார். குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகின் ஏழு முன்னணி நாடுகளில் நாமும் ஒன்றாக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த ஆண்டு மார்ச் மாதம் தேசிய குவாண்டம் இயக்கத்தைத் தொடங்கி வைத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

புனேவில் உள்ள ஐ.ஐ.எஸ்.இ.ஆர் நிறுவனத்தின் நிறுவப்பட்டும் 'ஐ-ஹப் குவாண்டம்' என்ற மையம் குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் புதிய நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்காகப் பணியாற்றி வருவதாக அமைச்சர் கூறினார். சென்னை ஐஐடி-யில் உள்ள புதுமைக் கண்டுபிடிப்புகள் மையமான (டிஐஹெச்) ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, பாதுகாப்பு வீரர்கள் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பான மொபைல் தொலைபேசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்; ஐ.ஐ.டி ரூர்க்கியில் உள்ள டி.ஐ.ஹெச், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இந்திய ஆயுதப்படைகளுக்கு உதவுவதற்கான முதல் உள்நாட்டு நானோ ட்ரோனை உருவாக்குவதாக அவர் கூறினார்.  மண்டியில் உள்ள ஐ.ஐ.டி, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி-யில் உள்ள டி.ஐ.ஹெச் போன்றவையும் பாதுகாப்புப் படையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கான புதுமைக் கண்டுபிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ராணுவ நடவடிக்கைகளில் புதிய தொழில் நுட்பங்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தேசிய பாதுகாப்பையும் பேணுவதற்கு இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரை பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியாவுக்கு இது சிறந்த நேரம் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். சந்திரயான் -3, ஆதித்யா எல் 1 மற்றும் கொவிட் தடுப்பூசி போன்றவற்றில் இந்தியாவின் வெற்றிகள் நாட்டின் மீதான உலகின் பார்வையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி உலகின் மிகப் பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டதைக் குறிப்பிட்ட அமைச்சர், "ஜி20 அமைப்பை ஜி21 ஆக மாற்றிய பெருமை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உண்டு என அவர் தெரிவித்தார்.  இந்தியாவின் வழிநடத்தலை ஏற்க இன்று உலகம் தயாராக உள்ளது என்பதை புதுதில்லி உச்சிமாநாடு தெளிவாக நிரூபித்துள்ளது என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

***

ANU/AD/PLM/DL


(Release ID: 1969935) Visitor Counter : 123