மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீனவர்களின் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதி இடைத்தரகர்கள் பிரச்சினை இல்லாமல் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது; மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா
Posted On:
09 OCT 2023 6:33PM by PIB Chennai
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சாகர் பரிக்ரமா பயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை மீனவ கிராமத்தில் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், மாமல்லபுரம் மீனவ கிராமங்களில் மீனவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று மத்திய அமைச்சர் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மத்திய அரசு ஒதுக்கும் நிதி மீனவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக எவ்வித இடையூறுமின்றி சென்றடைகிறது என்றார்.
முன்பெல்லாம் அரசு மானியமாக 100 ரூபாய் கொடுத்தால் அதில் 15 ரூபாய் மட்டுமே பயனாளிகளை சென்றடையும், ஆனால் இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சில் அந்த நிலை மாறி ஒரு ரூபாய் கூட குறையாமல் பயனாளிகளை சென்றடைகிறது என்றார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் பிரதமரின் மத்ஸய சம்பதா திட்டத்தின்கீழ் கிசான் கடன் அட்டைகள் மூலம் அவர்களுக்கு பல்வேறு நிதியுதவிகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இறால் வளர்ப்பு மறறும் இறால் குஞ்சு பொரிப்பகங்களின் சங்கங்களின் சார்பாக நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில்
இறால் மற்றும் நீர்வாழ் உயிரின குஞ்சு பொரிப்பகங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் நிதியுடன் செயல்படுத்தப்படும் மீன்வளத்துறை திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து சென்னையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். மீன்வளத்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மாநில அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றார். தமிழ்நாட்டில் சாகர் பரிக்ரமா பயணம் சிறப்பாக அமைந்தது என்றும் இதற்கு மாநில அரசு அலுவலர்கள் பங்கும் மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சாகர் பரிக்ரமா பயணத்தின் நிறைவு நாளான இன்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சென்னை திருவொற்றியூர் பகுதியில் சூரை மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தார். 200 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார், பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற ஒன்பதாவது கட்ட சாகர் பரிக்ரமா பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சென்னை துறைமுக ஆணைய தலைவர் சுனில் பலிவால் அவர்களும், வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சென்னை காசிமேடு துறைமுக மேம்பாட்டுக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
மத்திய அரசு மீனவர்களுக்கு ரூபாய் 1.6 லட்சம் வரை பினையில்லா கடன் வழங்குவதாகவும், இதுமட்டுமில்லாமல் பிரதமரின் மத்ஸய சம்பதா திட்டத்தின்கீழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார். மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாகவும் இது மேலும் வளர்ச்சியடைய மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் சாகர் பரிக்ரமா பயணம் சிறப்பான ஒரு வெற்றிப்பயணம் என்றார்.
-----
SM/AD/KRS
(Release ID: 1966105)
Visitor Counter : 137