ஜல்சக்தி அமைச்சகம்
ஜம்மு காஷ்மீர் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத ஓடிஎஃப் பிளஸ் அந்தஸ்தை எட்டியுள்ளது –ஜம்மூ காஷ்மீரின் 6650 கிராமங்களும் கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக அறிவி்க்கப்பட்டுள்ளன
Posted On:
30 SEP 2023 5:52PM by PIB Chennai
தற்போது நடைபெற்று வரும் 'தூய்மையே சேவை' இயக்கத்தின் போது எட்டப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் 20 மாவட்டங்களில் உள்ள 285 வட்டாரங்களில் உள்ள அதன் 6650 கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடமற்ற பிளஸ் மாதிரியாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் கழிப்பறைகளைக் கட்டுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தாண்டி, யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் திறந்தவெளி கழிப்பிடமற்ற பிளஸ் மாதிரியை அடைவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ஒரு கிராமம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை மற்றும் ஓடிஎஃப் பிளஸ் என்ற அந்தஸ்தை அடைய மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மற்றும் போதுமான தூய்மை விழிப்புணர்வு நடவடிக்கைகள் தவிர, குப்பைகள் இல்லாத மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீர் இல்லாத ஒரு கிராமம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஓடிஎஃப் பிளஸ் மாதிரி என்று அறிவிக்கப்படுகிறது.
அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாற்றும் முயற்சியில், சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டன. திட்டங்களின் அடிப்படையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கணிசமான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1,77,442 தனிநபர் உரக்குழிகள் மற்றும் 12621 சமுதாய உரக்குழிகள் அரசால் அல்லது மக்களால் வீடுகளில் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் தங்கள் கரிம கழிவுகளை திடமாகவோ அல்லது திரவமாகவோ சுயமாக அகற்றுவதை ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றனர். உலர் மற்றும் ஈரக்கழிவுகளை பிரித்து, ஈரக்கழிவுகளை உரக்குழிகளில் பதப்படுத்த, மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக 6509 குப்பை சேகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் 5523 சமுதாய சுகாதார வளாகங்களும், 17,46,619 தனிநபர் இல்லக் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
கிராமங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, ஒவ்வொரு வட்டாரத்திலும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை அலகுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்டு, இறுதியாக அப்புறப்படுத்தப்படும்.
அலுவலர்கள், கிராம அளவிலான பணியாளர்கள், தூய்மை தொடர்பான பிரதிநிதிகள் ஆகியோரின் திறனை மேம்படுத்தும் வகையில், 20 மாவட்டங்களில் உள்ள 285 வட்டாரங்களில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் ஊராட்சி அளவில் நடத்தப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அளவில் தகவல்களை வழங்கவும், வழிகாட்டுதல் வழங்கவும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு பொது மற்றும் தனியார் கட்டடங்களும் தூய்மை பற்றிய செய்திகளை எடுத்துச் செல்கின்றன.
தொடர்ச்சியான முயற்சிகள், மக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் இந்த யூனியன் பிரதேசம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பிளஸ் மாதிரி என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது. ஓ.டி.எஃப் பிளஸில் நிலையான தன்மை என்பது ஒரு முறை சாதனை அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பயணம். இதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு, நடத்தை மாற்றம், சமூக ஈடுபாடு, நிதி நிலைத்தன்மை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல பரிமாண அணுகுமுறை தேவைப்படுகிறது.
Release ID= 1962394
***
AD/ANU/PLM/KRS
(Release ID: 1962456)
Visitor Counter : 100