சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கையை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்
Posted On:
26 SEP 2023 7:17PM by PIB Chennai
மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறையில் தற்சார்பை அடைவதற்கான பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள் என மத்திய சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவிய கூறியுள்ளார்.
நாட்டில் மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கையை புது தில்லியில் இன்று (26.09.2023) அவர் வெளியிட்டார். அத்துடன் மருந்து தொழில்நுட்பத்துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, மருந்துகளின் உலகளாவிய சந்தையில் இந்தியாவை அதிக பங்களிப்புக் கொண்ட நாடாக மாற்றுவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும் என்று கூறினார். புத்தொழில் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களின் திறன்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த கொள்கை உதவும் என்று அவர் கூறினார்.
வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை நாம் பெருமளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்காக, இமாச்சலப் பிரதேசம், விசாகப்பட்டினம் மற்றும் குஜராத்தில் மூன்று மொத்த மருந்து பூங்காக்களையும் , இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் நான்கு மருத்துவ சாதன பூங்காக்களும் உருவாக்கப்படுவதாக அவர் கூறினார். இது இந்த துறையை வலுப்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
உயிர் காக்கும் மருந்துகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், உலகளாவிய மருத்துவ ஏற்றுமதி மையமாக இந்தியா மாறுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இதன் மூலமாக மட்டுமே இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் தன்னிறைவை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். தொழிற்சாலைகள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து, நம் நாடு மற்றும் உலகின் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள், புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய ஆராய்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். நமது முக்கிய தேவைகளுக்கு யாரையும் சார்ந்திருக்காத அளவில் நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் இந்நிகழ்ச்சியில் பேசுகையில், கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்ட பிறகு, இந்தியா உலகை வழிநடத்துகிறது என்றார். புதிய சீர்திருத்தங்கள் மருந்து தொழில்நுட்பத் துறையை மாற்றி அமைக்கும் என்று அவர் கூறினார்.
***
Release ID: 1960812)
AP/ANU/PLM/RS/KRS
(Release ID: 1961076)
Visitor Counter : 153