மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, இத்துறையின் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடலோரப் பயணத்தின் 8-வது கட்டத்தைத் தொடங்கி வைக்கின்றனர்
Posted On:
29 AUG 2023 6:36PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, இத்துறையின் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் கடலோரப் பயணத்தின் 8-வது கட்டத்தை 2023 ஆகஸ்ட் 31 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தொடங்கிவைப்பார்கள். இந்தக் கட்டம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்தப் பயணம் செப்டம்பர் 02 அன்று ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள வளமாவூரில் ஒருங்கிணைந்த கடற்பாசி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுடன் நிறைவடையும். இந்த நிகழ்வின் போது, கடலோர பயணம் குறித்த தமிழ்ப்பாடல் வெளியிடப்படும்.
கடலோர பகுதி முழுவதும் உள்ள மீனவ சமூகத்தைச் சென்றடையும் நோக்கம் கொண்டது கடலோரப்பயணம் என்ற இந்த நிகழ்வு. மீனவர்களின் பிரச்சனைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோரப் பகுதிகளின் மீனவர்களுக்கான திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த முன் முயற்சி தொடங்கப்பட்டது.
கடலோரப் பயணத்தின் இந்தக் கட்டத்தில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர்கள், மாநில மீன்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், மத்திய அரசின் மீன்வளத் துறை, மாநில அரசின் மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு மையம், தேசிய மீன்வள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மீன்வள நாட்டிகல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்வார்கள். 2023 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை கடலோரப் பயணத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மீனவப் பிரதிநிதிகள், மீன் வளர்ப்போர், தொழில் முனைவோர், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற தரப்பினர் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு கடல், உவர்நீர், உள்நாட்டு மீன்வளம் ஆகியவற்றால் வளமடைந்து, மீன் பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்கு உகந்ததாக உள்ளது. தமிழ்நாடு 1,076 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது, இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையாகும். மாநிலத்தில் கடல் மீன் உற்பத்தி (2021-22) 5.95 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதில் ரூ.6,559.64 கோடி மதிப்புள்ள 1.14 லட்சம் மெட்ரிக் டன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,830 விசைப்படகுகள் மற்றும் 45,685 பாரம்பரிய மீன்பிடி படகுகள் மூலம் மீன்பிடிக்கும் 10.48 லட்சம் கடல் மீனவர்களின் வாழ்வாதாரமும், தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 4,41,977 கடல் மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது.
இம்மாநிலத்தின் மீன்வளம், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நேரடியாகவும், துணை தொழில்கள் மூலமும், வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது. 2021-22 ஆம் ஆண்டில், மாநில வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு 5.78% ஆகும். 2021-22 ஆம் ஆண்டில் 1.14 லட்சம் மெட்ரிக் டன் மீன் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் அந்நியச் செலாவணியில் மீன்வளத் துறையின் பங்கு ரூ.6,559.64 கோடியாக இருந்தது.
பிரதமரின் மத்சய சம்பட யோஜனா, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, வேளாண் கடன் அட்டை மற்றும் மாநிலத் திட்டங்கள் தொடர்பான சான்றிதழ்கள் / ஒப்புதல்கள் முற்போக்கான மீனவர்களுக்கு, குறிப்பாக கடலோர மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்கள், இளம் மீன்பிடி தொழில்முனைவோர் மற்றும் பலருக்கு இந்த நிகழ்வின் போது வழங்கப்படும். மத்திய அரசின் பல்வேறு மீனவர் நலத் திட்டங்கள், மாநில திட்டங்கள், பற்றிய தகவல்கள் மீனவர்களிடையே கலைவடிவங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் பரவலாக்கப்படும்.
மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்களைப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பயணம் அமையும். இது மீனவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். நிச்சயமாக, கடலோரப் பயணத்தின் தாக்கம் வரும் காலங்களில் மீனவர்கள் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்திலும், முழுமையான வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற 7 கட்ட பயணங்கள், குஜராத், டையூ மற்றும் டாமன், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் ஆகிய 8 மேற்கு கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 58 இடங்களில் 3600 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியிருந்தன.
நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கரையோர மீனவ சமூகங்களின் வாழ்வாதாரங்கள், மீனவ சமூகங்களின் இடைவெளிகளைக் குறைத்தல் ஆகியவற்றில் சமநிலையை ஏற்படுத்துவதில் இந்தப் பயணங்கள் பெரும் தாக்கத்தை உருவாக்கின. செயற்கை பவளப்பாறைகள், கடல் மீன் வளர்ப்பு போன்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கடலோர மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் இந்தப் பயணம் வலியுறுத்துகிறது.
மீனவ மக்களை அவர்களின் வீடுகளில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளைப் புரிந்துகொள்ளுதல், நிலையான மீன்பிடிப்பை ஊக்குவித்தல், மீனவ சமூகத்தின் நலனுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை விளம்பரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இந்தப் பயணம்.
***
(Release ID: 1953347)
Visitor Counter : 238