நித்தி ஆயோக்

நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நித்தி ஆயோக் மற்றும் யு.என்.டி.பி கையெழுத்திட்டன

Posted On: 29 AUG 2023 4:11PM by PIB Chennai

நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நித்தி ஆயோக் மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டம் (யு.என்.டி.பி இந்தியா) ஆகியவை தரவு அடிப்படையிலான கண்காணிப்பு, முன்னேறும் மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன.

நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திரு பி.வி.ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில், நித்தி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மூத்த ஆலோசகர் டாக்டர் யோகேஷ் சூரி மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டப் பிரதிநிதி திருமதி ஷோகோ நோடா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த கூட்டுச் செயல்பாட்டு வரவேற்றுப் பேசிய திரு பி.வி.ஆர்.சுப்பிரமணியம், பல ஆண்டுகளாக, நித்தி ஆயோக் மற்றும் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் ஒத்துழைப்பு வலிமையாக உள்ளது என்று கூறினார். கண்காணிப்பு என்பது மாவட்டங்களைத் தாண்டி வட்டாரம் வரை செல்வதால், இந்த கூட்டுச் செயல்பாடுகள், தரவு சார்ந்த திட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.  ஐநா வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, அதன் வளர்ச்சி முன்னுரிமை இலக்குகளை இந்தியாவில் அடைவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐநா வளர்ச்சித் திட்டத்தின் இந்திய பிரதிநிதி திருமதி ஷோகோ நோடா, பேசுகையில், 2015-2016 மற்றும் 2019-2021-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் வறுமை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்தது என்று கூறினார். சிக்கலான சவால்கள் இருந்தபோதிலும், இலக்குகளை நோக்கிய விரைவான முன்னேற்றம் சாத்தியம் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு கையெழுத்தாகியுள்ளது. தேசிய மற்றும் அதற்கு அடுத்த நிலைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பாக நித்தி ஆயோக் உள்ளது. ஐ.நா அமைப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் ஐநா வளர்ச்சித் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

***



(Release ID: 1953244) Visitor Counter : 97