தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
முதன்முறையாக வழங்கப்படும் சிறந்த இணையத் தொடர் (ஓடிடி) விருதுக்கான பதிவுகளை சமர்ப்பிக்கும் தேதியை தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது
Posted On:
25 AUG 2023 4:58PM by PIB Chennai
முதன்முறையாக வழங்கப்படும் சிறந்த இணையத் தொடர் (ஓடிடி) விருதுக்கான உள்ளீடுகளை இணைய தளத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 25 என்பதற்கு பதிலாக செப்டம்பர் 4 மாலை 6 மணி வரை என தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதே நேரத்தில் தொடரின் பிரதியை செப்டம்பர் 12, 2023 க்குள் சமர்ப்பிக்கலாம்.
செப்டம்பர் 12, 2023 விடுமுறை நாளாக இருந்தால், அடுத்த வேலை நாள் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதியாக கருதப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ந்துள்ள ஓடிடி தளத்தின் படைப்பாற்றல் திறனை அங்கீகரிக்கும் நோக்கில் இந்த விருதுக்கு அதிக எண்ணிக்கையிலான இணையத் தொடர்கள் (வெப் சீரிஸ்) பங்கேற்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக சமர்ப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் முடிவை தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரபலங்களைக் கொண்ட ஒரு சிறந்த நடுவர் குழு சிறந்த இணையத் தொடரைத் தேர்வு செய்யும். வெற்றியாளருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தகுதி பெற, வெப் சீரிஸ் எந்தவொரு இந்திய மொழியிலும் முதலில் உருவாக்கப்பட்ட / படமாக்கப்பட்ட தொடராக இருக்க வேண்டும். இது ஒரு அசல் படைப்பாக/ தயாரிப்பாக இருக்க வேண்டும். ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியிடும் நோக்கத்துடன் இந்தத் தொடரைத் தயாரித்திருக்க/ உரிமம் பெற்றிருக்க/ வாங்கியிருக்க வேண்டும்.
மேலும், இந்த விருதுக்கு தகுதி பெற, பதிவின் அனைத்துப் பகுதிகளும் (வெப் சீரிஸ் / சீசன்) ஜனவரி 1, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
விருதுகளுக்கான தகுதி குறித்த கூடுதல் விவரங்கள் தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்.எஃப்.டி.சி) மற்றும் ஐ.எஃப்.எஃப்.ஐ ஆகியவற்றின் வலை தளங்களில் கிடைக்கின்றன.
***
(Release ID: 1952139)
SM/ANU/SMB/RS/KRS
(Release ID: 1952270)
Visitor Counter : 138