தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் சிறந்த திரைப்படமாக தேர்வு
Posted On:
24 AUG 2023 6:10PM by PIB Chennai
69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழு 2021-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களை இன்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, தலைவர் மற்றும் பிற நடுவர் குழு உறுப்பினர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூரை சந்தித்து விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலை வழங்கினர். விருதுகளுக்கு சிறந்தவர்களைத் தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
நடுவர் குழுவில் இந்திய சினிமா உலகின் தலைசிறந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர். திரைப்பட நடுவர் குழுவின் தலைவர் திரு.கேதன் மேத்தா, கதைசாராத் திரைப்பட நடுவர் குழுத் தலைவர் திரு வசந்த் எஸ்.சாய், திரைப்படம் குறித்த சிறந்த எழுத்துக்கான நடுவர் திரு.யதீந்திர மிஸ்ரா ஆகியோர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி. நீர்ஜா சேகர் முன்னிலையில் விருதுகளை அறிவித்தனர்.
சிறந்த திரைப்படத்திற்கான விருது ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்துக்கும், சிறந்த கதைசாராப் திரைப்படத்திற்கான விருதை சிருஷ்டி லகேரா இயக்கிய ஏக் தா கோன் திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது கடைசி விவசாயி திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருது இரவின் நிழல் திரைப்படத்தில் மாயாவா சாயாவா என்ற பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கீஸ் தத் விருது காஷ்மீர் ஃபைல் திரைப்படத்திற்கும், சிறந்த பொழுதுப்போக்குக்கான விருது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
புஷ்பா (தி ரைஸ் பார்ட் 1) தெலுங்குத் திரைப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதையும், ஆலியா பட் மற்றும் க்ரித்தி சனோன் முறையே கங்குபாய் கத்தியவாடி மற்றும் மிமி ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகை விருதையும் வென்றுள்ளனர்.
சிறந்த இசையமைப்பாளர் விருது தெலுங்குத் திரைப்படமான புஷ்பா திரைப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்துள்ளது.
***
AD/ANU/IR/RS/KRS/DL
(Release ID: 1951828)
Visitor Counter : 356