சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
புதிய உச்சத்தை அடையும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்
Posted On:
24 AUG 2023 2:52PM by PIB Chennai
மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ், விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் 30.06.2023 நிலவரப்படி 1.74 லட்சம் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்ட வழக்குகளை முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை வழங்கி உள்ளன.
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குற்றவியல் சட்டம் (திருத்த சட்டம்), 2018-ஐ நிறைவேற்றுவதன் மூலம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க மத்திய அரசு வழிவகுத்தது. பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீண்டகால விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க பிரத்யேக நீதிமன்ற முறை தேவைப்பட்டது. அக்டோபர் 2019 முதல், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான விரைவான விசாரணைக்காக நாடு முழுவதும் 389 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தை நீதித் துறை செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் 1 நீதித்துறை அலுவலர் மற்றும் 7 பணியாளர்கள் உள்ளனர். 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 28 மாநிலங்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளன. இத்திட்டத்தில் சேர புதுச்சேரி சிறப்பு கோரிக்கை விடுத்து, 2023 மே மாதம் ஒரு பிரத்யேக போக்சோ நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்தது.
இத்திட்டம் ஆரம்பத்தில் 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் ரூ.767.25 கோடி மதிப்பீட்டில், நிர்பயா நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக ரூ.474 கோடியுடன் ஒரு வருட காலத்திற்கு செயல்படுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசின் பங்காக ரூ.971.70 கோடியுடன் மொத்தம் ரூ.1572.86 கோடி வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டில், இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 மார்ச் வரை இத்திட்டத்தை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
----------
AD/ANU/IR/RS/GK
(Release ID: 1951769)
Visitor Counter : 210