மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதானும் திருமதி நிர்மலா சீதாராமனும் குவி மற்றும் தேசியா பழங்குடி மொழி புத்தகங்களை புவனேஸ்வரில் வெளியிட்டனர்
Posted On:
17 AUG 2023 6:50PM by PIB Chennai
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனும் புவனேஸ்வரில் குவி மற்றும் தேசியா பழங்குடி மொழி புத்தகங்களை வெளியிட்டனர்.
இந்த விழாவில் உரையாற்றிய திரு பிரதான், ஒடிசாவின் மொத்த மக்கள் தொகையில் 23% ஐ உள்ளடக்கிய 62 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர், எனவே, மாணவர்களின் பேச்சு திறன், கற்றல் விளைவு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்த அவர்களின் உள்ளூர் தன்மை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் படங்கள், கதைகள் மற்றும் பாடல்களின் உதவியுடன் கற்பிப்பது அவசியம் என்றார்.இது தொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) முதல் முறையாக, ஒடிசாவின் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஒடிசாவின் பிரிக்கப்படாத கோராபுட் மாவட்டத்தில் குவி மற்றும் தேசியா பழங்குடி மொழிகளைப் பேசும் குழந்தைகளுக்காக "குவி பிரைமர்" மற்றும் "தேசியா பிரைமர்" என்ற இரண்டு விலைமதிப்பற்ற புத்தகங்களை தயாரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த இரண்டு பிரைமர் (தொடக்கநிலை நூல்) களும் அந்தக் குழந்தைகளின் வலுவான கல்வி அடித்தளத்தை உருவாக்குவது மட்டுமின்றி, ஒடிசா பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்து வளர்க்கும் என்று அவர் கூறினார்.
விழாவில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், தேசிய கல்விக் கொள்கை 2020 மிகவும் முற்போக்கான கொள்கையாகும். இது வெவ்வேறு நபர்கள் தங்கள் மனதை ஒன்றிணைத்த விரிவான ஆலோசனைகளின் விளைவாகும். இது மத்திய அரசு முடிவு செய்து அனைத்து மாநிலங்கள் மீதும் திணிக்கும் விஷயம் அல்ல. இது ஒரு பரந்த கட்டமைப்பாகும், மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதை மாற்றியமைக்க முடியும். என்றார். ஒருவர் தனது தாய்மொழியில் கற்கும்போது, பேசும்போது மற்றும் சிந்திக்கும்போது, சிந்தனையில் தெளிவு ஏற்படும். அதனால்தான் தாய்மொழியில் கற்றல் முக்கியம். பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக கல்வி அமைச்சகமும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் மொழிகள் மற்றும் வட்டார வழக்குகளில் தொடக்கநிலை நூல்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் வளப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
பிரதமர் அழைப்பின் பேரில், "எனது மண் எனது தேசம் " என்ற நாடு தழுவிய இயக்கத்தின் கீழ், நாட்டுக்காக தியாகம் செய்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர்கள் இன்று தொடர்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
பூரி கடற்கரையில் பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பி திரு சுதர்சன் பட்நாயக் அமைத்த "எனது மண் எனது தேசம்" குறித்த மணல் சிற்பத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த "நாயகர்களுக்கு" அஞ்சலி செலுத்த இந்தக் கலைப்படைப்பு ஒரு தனித்துவமான மற்றும் பாராட்டத்தக்க வழியாகும் என்று திரு பிரதான் தெரிவித்தார். இப்பணியில் ஈடுபட்ட சிற்பிகள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினரையும் அமைச்சர்கள் கௌரவித்தனர். தில்லியில் 'அமிர்தத் தோட்டம் ' ஒன்றை உருவாக்க தியாகி ஜெயி ராஜகுருவின் பிறப்பிடமான பூரிமாவட்டத்தின் பிராஹரகிருஷ்ணாபூர் கிராமத்தில் இருந்து வீடு வீடாக 'அமிர்தக் கலசத்தில்' மண் மற்றும் அரிசியை சேகரித்தனர். தியாகி ஜெயி ராஜகுருவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
*****
ANU/SM/PKV/KRS
(Release ID: 1950015)
Visitor Counter : 123