கூட்டுறவு அமைச்சகம்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா குஜராத்தின் காந்திதாமில் இப்கோ நானோ டிஏபி (திரவ) ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கி, கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற தொலைநோக்குப் பார்வையுடன் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வை வளமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளார்: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
12 AUG 2023 6:05PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா இன்று (12-08-2023) குஜராத்தின் காந்திதாமில் இப்கோ நானோ டிஏபி (திரவ) ஆலைக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், இப்கோ தலைவர், திலீப் சங்கானி உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்து, கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற தொலைநோக்கு பார்வையுடன் நாட்டின் 15 கோடி விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார். திரவ உரம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறைக்கு பல நன்மைகளைத் தரும் என்று அமைச்சர் கூறினார். நானோ டிஏபி திரவ உரம் தெளிப்பது நிலத்தை மாசுபடுத்தாது என்றும் இயற்கை விவசாயத்தை மேலும் எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதுடன் மண் வளமும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
திரவ டிஏபி, தண்ணீரை மாசுபடுத்தாது என்றும் அவர் கூறினார். மேலும் இந்த உரம் அரசின் மானிய சுமையைக் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். யூரியா மற்றும் டிஏபி பிரிவுகளில் இது இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்றும் அவர் கூறினார். இப்கோ நிறுவனம், உலகிலேயே முதன்முறையாக நானோ உரத்தை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், உரத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையும் நோக்கில் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சரியான அளவிலும், சரியான விலையிலும் உரங்கள் கிடைக்கும்போது, விவசாயிகள் மேலும் செழிப்படைவார்கள் என்று திரு அமித் ஷா கூறினார். கோதுமை மற்றும் அரிசியை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த காலம் மாறிவிட்டது என்று திரு அமித் ஷா கூறினார். இன்று, நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிறந்த திட்டமிடல் காரணமாக, இந்தியா உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது பூமித் தாயைக் காப்பாற்ற பல விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்குத் திரும்பியுள்ளதாக அவர் கூறினார். ஆனால் அவர்களுக்கு இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். முதலாவது சிக்கல் என்னவென்றால், சான்றிதழ் இல்லாததால், மக்கள் அவற்றை இயற்கை விவசாய உற்பத்தி என்று ஏற்பதில்லை என்று அவர் கூறினார். இரண்டாவதாக, இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள்களுக்கு நல்ல விலை கொடுக்க பலர் தயங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்டு அங்கு விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்காக பல மாநில கூட்டுறவு சங்கத்தை அரசு அமைத்துள்ளதாக அவர் கூறினார். இது நிலம் மற்றும் உற்பத்திக்கு சான்றளிப்பதுடன் விவசாயிகளிடமிருந்து இயற்கை விளைபொருட்களை வாங்கும் என்று அவர் தெரிவித்தார் இந்த பொருட்கள் நாடு தழுவிய அளவில் சந்தையில் கவர்ச்சிகரமான பேக்கிங்குடன் விற்கப்படும் எனவும் இதில் கிடைக்கும் லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் திரு அமித் ஷா கூறினார். ஏற்றுமதிக்காக மூன்றாவது பல மாநில கூட்டுறவு சங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
உரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் வலுவான தூணாக கூட்டுறவுத் துறை மாறியுள்ளது என்றும், தற்போது இந்தத் தூண் மேலும் வலுவடைந்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
**************
ANU/SM/PLM/DL
(Release ID: 1948222)
Visitor Counter : 194