குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது; அவர்கள் விரும்பும் துறையைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 12 AUG 2023 8:17PM by PIB Chennai

பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது எனவும் அவர்கள் விரும்பும் துறையைத் தேர்வு செய்ய அனுமதிக் வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேரு யுவகேந்திரா நடத்திய பிரதமரின் மனதின் குரல் உரை தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் புதுதில்லியில், குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் இன்று (12-08-2023) குடியரசுத் துணைத் தலைவரைச் சந்தித்தனர். அப்போது பேசிய திரு ஜக்தீர் தன்கர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மூலம் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள் எனவும் அது நல்லதல்ல என்றும் கூறினார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சாதனை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த திரு ஜக்தீப் தங்கர், போதைப்பொருள் பயன்பாடு உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று விவரித்தார். போதைப்பொருள் மனிதகுலத்திற்கு ஒரு சவால் என்று கூறிய அவர், இது மனங்களை அழிக்கிறது என்று கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததற்காக அரசை திரு ஜக்தீப்  தங்கர் பாராட்டினார்.

ஊழல் சாமானிய மக்களின் மிகப்பெரிய எதிரி என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், அது சம வாய்ப்பைப் பறித்து, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்றார். ஊழல் ஒழிப்பில் அரசின் உறுதியான நிலைப்பாடு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் பணப் பரிமாற்றம் போன்ற பல முன்முயற்சிகள் அனைவரையும் உள்ளடக்கிய சேவைகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார். இது போன்ற திட்டங்கள் நமது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்றியமைத்துள்ளது எனவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசத்தை எப்போதும் முதன்மையாகக் கருதுமாறு மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். தேசத்தின் நிறுவன அமைப்புகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பவர்களை உறுதியான முறையில் எதிர்கொள்ளுமாறு திரு ஜக்தீப் தங்கர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு வி.முரளிதரனும் கலந்து கொண்டார்.

 

**************  

ANU/SM/PLM/DL


(Release ID: 1948220) Visitor Counter : 123