உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா குஜராத் மாநிலம் கட்ச்சில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நமது பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களின் நலனில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்கறை செலுத்தி வருகிறார்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
12 AUG 2023 7:30PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் மற்றும் படகுகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடிய மூரிங் பிளேஸ் (Mooring Place) எனப்படும் தளத்துக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டியதுடன் குஜராத்தின் கட்ச்சில் பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் இன்று (12-08-2023)தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஹராமி நாலாவுக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
கோட்டேஷ்வரில் மூரிங் பிளேஸ் எனப்படும் தளத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதி்ல் எல்லைப் பாதுகாப்புப் படை நிர்வாக வளாகம், உணவகம், அணிவகுப்பு மைதானம், பயிற்சி மையம், படகுகள் உள்ளிட்ட நீர் வழிப் போக்குவரத்து அமைப்புகளைப் பழுதுபார்ப்பதற்கான மையம் போன்றவை சுமார் ரூ. 250 கோடி செலவில் அமைக்கப்படும். இது உருவாக்கப்பட்ட பிறகு, மேற்கு மண்டலத்தில் உள்ள ஹராமிநாலா முதல் குஜராத்தின் முழு நீர் எல்லை வரை எல்லைப் பாதுகாப்புப் படையின் அனைத்து படகுகள் மற்றும் கப்பல்களை சீராக பராமரிக்க முடியும். இதனுடன் புதிய சாலைத் திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித்ஷா, ராணுவத்தைப் போலவே நீர், நிலம் மற்றும் வான் எல்லைகளைப் பாதுகாக்கும் திறன், வலிமை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உள்ளது என்று கூறினார். குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் பல முக்கியமான நிறுவனங்கள் அமைந்துள்ளன என்றும் அதனால் கடலோர பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். நமது எல்லைப் பாதுகாப்புப் படை மிகுந்த விழிப்புடனும் விரைவாகவும் செயல்பட்டு வருகிறது என்று திரு அமித் ஷா கூறினார்.
நமது பாதுகாப்புப் படைகளின் வீரர்கள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்து வருவதாகவும், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதாகவும் திரு. அமித் ஷா தெரிவித்தார். ஆயுஷ்மான் சிஏபிஎஃப் திட்டத்தின் கீழ், 39 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் சிஏபிஎஃப் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தில் 24000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறார்கள் என்று திரு அமித் ஷா கூறினார்.
**************
ANU/SM/PLM/DL
(Release ID: 1948200)
Visitor Counter : 157