சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவ நிலை மாற்றத்துடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 11 AUG 2023 2:12PM by PIB Chennai

பருவநிலை மாற்றம் பல வழிகளில் மனித ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். குறிப்பாக வெப்ப அலைகள், சூறாவளி, வெள்ளம், வறட்சி போன்றவை அதிகரிக்கும் போது, சுகாதார சாவல்களும் அதிகரிக்கின்றன.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் படி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் அத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

  1. பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் குறித்த ஒரு தேசிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுகாதாரத் துறையில் பல்வேறு நிலைகளில் (தேசிய மற்றும் மாநில) முன்னுரிமை பகுதிகளை குறிப்பிட்டு எடுத்துரைக்கிறது.
  2. சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்த வகையில், சுற்றுச்சூழல் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.  வெப்ப அலை (மார்ச்-ஜூலை), குளிர் அலை (டிசம்பர்-ஜனவரி) வெள்ள எச்சரிக்கைகள் போன்ற முன்னறிவிப்புகள்  வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்படுகின்றன. காற்றின் மாசு தரவு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
  3. உலக சுகாதார தினம் (ஏப்ரல்), உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன்),  தூய்மையான காற்றுக்கான சர்வதேச தினம் (செப்டம்பர்), பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் (அக்டோபர்) ஆகிய நாட்களில் நாடு தழுவிய பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.
  4. தேசிய அளவிலான பயிலரங்குகள், மாநில அளவிலான முதன்மை பயிற்றுநர்களுக்கான பயிற்சிகள், காற்று மாசு தொடர்பான நோய்கள் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் போன்றவையும் நடத்தப்படுகின்றன.
  5. மத்திய மற்றும் மாநில அளவில் காற்று மாசுபாடு மற்றும் வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சுற்றுச்சூழல் சுகாதார கண்காணிப்பு நடத்தப்படுகிறது.
  6. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பசுமை நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.

நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. கொசுக்களால் பரவும் நோய்கள், மற்றும் நீர், சுகாதார பிரச்சினைகள் போன்றவைத் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

28 மாநிலங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் குறித்த மாநில அளவிலான செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் திரு எஸ்.பி.சிங் பாகெல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

*****

AD/ANU/PLM/RS/KPG

 


(Release ID: 1947761) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Telugu