அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலகளாவிய சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
08 AUG 2023 6:27PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி உலகளாவிய பருவநிலை இயக்கத்தை வழிநடத்துவதாகவும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் வழிநடத்தலை ஏற்க உலகம் தயாராக உள்ளது எனவும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில், தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடிய அவர், பி.ஹெச்.டி சேம்பர் என்ற இந்த தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பசுமை ஹைட்ரஜன் மையத்தை இந்த கூட்டமைப்பு அமைத்துள்ளதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். பசுமை எரிசக்தி மாற்றத்தில் கவனம் செலுத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு உதவ மத்திய அரசு விரும்புகிறது என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருள் வளங்களிலிருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின் திறனை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியா சிறந்த அறப்போரை கடந்த ஒன்பது ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளதாக அவர் கூறினார். 2030 பாரிஸ் ஒப்பந்த இலக்கை விட அதிகமாக, புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 40 சதவீத எரிசக்தி உற்பத்தி செய்வது இந்தியா இலக்கை மிஞ்சியுள்ளதாக திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
"மிஷன் இன்னோவேஷன்" மூலம், ஊக்கமளிக்கும் கண்டுபிடிப்பு இலக்குகளை ஊக்குவிப்பதற்கான கூட்டு முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, பசுமை இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டிகள் போன்ற தேசிய இயக்க முன்முயற்சிகள் நாடு முழுவதும் தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்புகளின் மையங்களை ஊக்குவித்துள்ளன. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு குறைந்த கார்பன் மாற்றுகளை ஒருங்கிணைந்த முறையில் உருவாக்க இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் செயல்திட்டம், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் முயற்சியால், ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதாகவும், இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், 50 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை இலக்காகக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி சுகாதார திட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 59 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். இந்த விரிவாக்கத்தின் விளைவாக, இந்தியா இப்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சாலைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் திட்டம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Release ID: 1946799
***
ANU/SM/PLM/KRS
(Release ID: 1946893)
Visitor Counter : 150