நிலக்கரி அமைச்சகம்

2023-24-ம் நிதியாண்டில் பொதுத்துறை நிலக்கரி, பழுப்பு நிலக்கரி நிறுவனங்களின் பசுமை நடவடிக்கைகள்

Posted On: 08 AUG 2023 1:47PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக பல ஆண்டுகளாக தங்கள் உற்பத்தி அளவை அதிகரித்து வருகின்றன. அத்துடன், சுரங்கம் தோண்டப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது மற்றும் நிலக்கரி வயல்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோட்டம் அமைத்தல் போன்ற பல்வேறு பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதன் மூலம் உள்ளூர் சுற்றுச்சூழலில் அந்த நிறுவனங்கள் அக்கறை காட்டுகின்றன.

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் 2023-24 நிதியாண்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவுள்ளன. இந்த மரக்கன்றுகள் 2400 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்ய  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள், 2023 ஆகஸ்ட் நிலவரப்படி  1117 ஹெக்டேர் நிலப்பரப்பில் 19.5 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மர இனங்களை நடவு செய்துள்ளன. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி பொதுத் துறை நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி வயல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 30,000 ஹெக்டேர் பரப்பளவை தோட்டக்கலை நடவடிக்கைகள் மூலம் பசுமையாக்கத் திட்டமிட்டுள்ளன.

நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களால் மியாவாகி எனப்படும் அடர் காடுகள் நடவு முறை போன்ற புதுமையான தோட்டத் தொழில் நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. ஜப்பானிய தோட்டக்கலை நுட்பமான மியாவாகி முறை, மோசமான அல்லது வறண்ட நிலத்தில் அடர்த்தியான காடுகளை விரைவாக உருவாக்க மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும்.

நிலக்கரி சுரங்கம் மற்றும் பிற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நிலங்கள் உட்பட சேதமடைந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய முறையாக காடு வளர்ப்பு உள்ளது. இது மண் அரிப்பைத் தடுக்கவும், சிறந்த பருவநிலையை உறுதிப்படுத்தவும், வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், காற்று மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.  

***



(Release ID: 1946770) Visitor Counter : 101


Read this release in: Kannada , English , Urdu , Hindi