குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
நாட்டில் உள்ள தொழில்நுட்ப மையங்கள் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 197.26 கோடி செலவில் பொதுப் பொறியியல் நிறுவனம் அமைக்கப்படும்
Posted On:
07 AUG 2023 3:34PM by PIB Chennai
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) அமைச்சகம், 1967 முதல் 1999 வரை, பொதுப் பொறியியல், ஆட்டோமேஷன், கைக் கருவிகள், பிளாஸ்டிக், வாகன உதிரிபாகங்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், தோல் மற்றும் காலணிகள், நறுமணம் மற்றும் சுவையூட்டிகள் போன்ற துறைகளில் கருவி அறைகள் 10, தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் 8, என நாடு முழுவதும் 18 தொழில்நுட்ப மையங்களை நிறுவியது. இவற்றில் சென்னையில் உள்ள மத்திய காலணி பயிற்சி (சி.எஃப்.டி.ஐ) நிறுவனமும் ஒன்றாகும். இவற்றின் முதன்மை நோக்கம் நாட்டில் உள்ள தொழில்களை, குறிப்பாக எம்.எஸ்.எம்.இ.க்களை ஆதரிப்பதாகும்.
எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு சேவை செய்வதில் தற்போதுள்ள 18 தொழில்நுட்ப மையங்களின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் அதிக மையங்களை அமைப்பதன் மூலம் அவற்றின் வலைப்பின்னலை வலுப்படுத்துவதற்கான தேவை உணரப்பட்டது. அதன்படி, தொழில்நுட்ப மைய அமைப்புகள் திட்டத்தின் (டி.சி.எஸ்.பி) கீழ், நாடு முழுவதும் 15 புதிய தொழில்நுட்ப மையங்கள் நிறுவப்படுகின்றன
தொழில்நுட்ப மையங்களை அமைக்கும்போது அரசு எதிர்கொள்ளும் சவால்கள் பின்வருமாறு:
• தொழில்நுட்ப மையங்கள் அமைக்க மாநில அரசு நிலம் ஒதுக்குவதில் தாமதம்;
• கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்குப் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளைப் பெறுவதில் தாமதம்;
• கொவிட் 19 காரணமாக, உலகளாவிய மதிப்புத் தொடர் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக இயந்திரங்களின் தாமதமான விநியோகம் ஏற்பட்டது;
• கொவிட்-19 பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன;
• முழுமையான இயந்திரங்கள் தயாரிக்கத் தேவையான பல்வேறு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில், துறைமுகத்தில் நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படாததால் அது குறித்த நேரத்தில் நடைபெறவில்லை. இது உற்பத்தியையும் விநியோகத்தையும் தாமதப்படுத்தியது.
தற்போது தொழில்நுட்ப மைய அமைப்புகள் திட்டத்தின் (டி.சி.எஸ்.பி) கீழ், 15 புதிய தொழில்நுட்ப மையங்கள் நிறுவப்படுகின்றன. இவற்றில் ஒன்றாக ரூ. 197.26 கோடி செலவில் ஸ்ரீபெரும்புதூரில் பொதுப் பொறியியல் நிறுவனம் அமைக்கப்படும். புதுச்சேரியில் ரூ. 121.57 கோடி செலவில் மின்னணு முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (இஎஸ்டிஎம்) நிறுவனம் அமைக்கப்படவுள்ளது.
இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
ANU/SM/SMB/KPG
(Release ID: 1946453)