குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நமது நிறுவன அமைப்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் தீய முயற்சிகள் குறித்து குடியரசு துணைத்தலைவர் வேதனை
Posted On:
06 AUG 2023 8:09PM by PIB Chennai
நமது நிறுவன அமைப்புகளை களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும் சிலர் எடுக்கும் தீய முயற்சிகள் குறித்து குடியரசு துணைத்தலைவர் திரு. ஜகதீப் தன்கர் இன்று தனது வேதனையை வெளிப்படுத்தினார். இத்தகைய சக்திகள் குறித்து அறிந்து அனைவரும் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், நாட்டுக்கு எதிரான கருத்துக்களை புறம்தள்ள நாட்டு மக்கள் ஒருபோதும் தயங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். "மாற்றாக எண்ணும் தீய சக்திகளை தோற்கடிக்க நீங்கள் உங்கள் மனதில் உள்ளதைப் பேச வேண்டும்," என்று அவர் கூறினார்.
நாடு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் காணும் போது, பிற்போக்குத்தனமான சவால்கள் இருக்கத்தான் செய்யும் என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், தேசியவாதம் மற்றும் தேசிய நலன் என்று வரும்போது ஒருபோதும் பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். "அரசியல் களத்தில் இருக்கும்போது அரசியல் சார்பு அணுகுமுறை நல்லது, ஆனால் நீங்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறும்போது, அரசியல் பின்னிருக்கைக்கு சென்றுவிட வேண்டும். தேசத்தின் நலனாக இருக்கும்போது, நாம் எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும். நாம் நேர்மறையான மனப்பான்மையுடன் எதிர்கொள்ள வேண்டும், தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஏதிர்கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
புதுதில்லியில் இன்று கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நூலக விழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய திரு தன்கர், அறிவார்ந்த குடிமக்கள் எந்தவொரு ஜனநாயக செயல்முறையின் மிகப்பெரிய முதுகெலும்பு வலிமை என்று விவரித்தார். அறிவார்ந்த குடிமகன் மட்டுமே தேச விரோத சக்திகளையும் கதையாடல்களையும் புறக்கணிக்க முடியும் என்று கூறிய அவர், தகவலறிந்த குடிமகன் அந்தஸ்தை அடைய நூலகங்கள் இன்றியமையாதவை என்று கூறினார்.
விவாதம், உரையாடல்கள் நடைபெற வேண்டிய ஜனநாயகத்தின் கோயில் என்று நாடாளுமன்றத்தை விவரித்த குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்றத்தில் இடையூறுகள் மற்றும் தடங்கல்கள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
நாடாளுமன்றத்தில் மிகப்பெரும் திறமையானவர்கள் இருப்பதை அங்கீகரித்த திரு தன்கர், அவர்கள் மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டு வருவதாகவும், மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில், அந்த திறமையை தேசிய நோக்கத்திற்காகப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார். ஆனால், நமது ஜனநாயகக் கோயில்கள் பேச்சுவார்த்தையிலும் விவாதத்திலும் ஈடுபடாமல், இடையூறுகளால் பாதிக்கப்பட்டால், அந்த இடம் காலியாக இருக்கப்போவதில்லை. அரசியலமைப்பிற்குப் பொறுப்பேற்காத சக்திகளால் அது ஆக்கிரமிக்கப்படும்" என்று எச்சரித்த அவர், இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்த முயற்சிக்காக கலாச்சார அமைச்சகத்தைப் பாராட்டிய அவர், இது நாட்டில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "நூலக மேம்பாடு சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியைக் கொண்டுவருகிறது. இது நாகரிகங்கள் மற்றும் கலாச்சாரங்களின் முன்னேற்றத்திற்கான அளவீடு" என்று அவர் கூறினார்.
நூலகங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாராட்டிய அவர், டிஜிட்டல் நூலக முன்முயற்சி தடைகளை உடைத்து, அனைத்து குடிமக்களுக்கும் அறிவை அணுகுவதற்கு அதிகாரம் அளிக்கிறது என்றார். நாகரிக வளர்ச்சியை மாற்றுவதற்கான ஒரே உருமாற்ற வழிமுறை கல்வி மட்டுமே என்றும் அவர் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில், காலனித்துவ ஆட்சியால் தடைசெய்யப்பட்ட நமது சுதந்திர போராட்ட வீரர்களின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட காபி டேபிள் புத்தகத்தையும் குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார். காபி டேபிள் புத்தகத்தை நமது அரசியலமைப்பு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலி என்று விவரித்த அவர், இது "சுதந்திரத்திற்காக, நமது மதிப்பு முறைக்கான இந்திய மேதையின் மிகவும் உண்மையான பதிவு" என்று அவர் குறிப்பிட்டார். உங்களிடமிருந்து மறைக்கப்பட்டதையும் தடைசெய்யப்பட்டதையும் அது உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறது என்றார். நாட்டின் சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் செய்த எண்ணற்ற தியாகங்களை நினைவு கூர்ந்த அவர், இந்த தனித்துவமான புத்தகத்தை ஒவ்வொரு குழந்தையும் படிக்க வைக்குமாறு அங்கிருந்த அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன், மூத்த அதிகாரிகள், நூலகர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
***
SM/PKV/DL
(Release ID: 1946248)
Visitor Counter : 132