சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்
Posted On:
04 AUG 2023 3:14PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.எச்.எம்) ஒரு பகுதியாக தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் (என்.பி-என்.சி.டி) கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வழங்குகிறது.
உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் தடுப்பு, தொடக்கத்திலேயே நோயறிதல், மேலாண்மை மற்றும் பொருத்தமான சிகிச்சை வசதிக்கு பரிந்துரைத்தல் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. தொற்றா நோய்களுக்கு (என்.சி.டி) மாவட்ட அளவில் மற்றும் அதற்குக் கீழான செயல்பாடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, மாநிலங்களுக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 60:40 என்ற விகிதத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்தில் நிதி வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான தொற்றா நோய் சிகிச்சை மையங்கள் 724, இருதய சிகிச்சை மையங்கள் 210, மாவட்ட பகல் நேர பராமரிப்பு மையங்கள் 326 மற்றும் 6110 சமுதாய நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ், 2025-ம் ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கான இலக்கை அடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம் மற்றும் வணிகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்) சட்டம், 2003 என்ற ஒரு விரிவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்கள் போன்ற பொதுவான தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், பரிசோதிப்பதற்கும் மக்கள்தொகை அடிப்படையிலான முன்முயற்சிகள் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழும், விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பின் ஒரு பகுதியாகவும் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
SM/ANU/PLM/RS/KPG
(Release ID: 1945915)
Visitor Counter : 210