சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு

Posted On: 04 AUG 2023 3:12PM by PIB Chennai

இறந்தவர்களின் உடல் உறுப்புகளை  தானம் செய்வது மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மூன்று அடுக்கு கட்டமைப்பான தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் மற்றும் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் ஆகியவற்றின் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இதில் அடங்கும்.

தகவல் வழங்கவும், தொலைபேசி ஆலோசனை வழங்கவும், உடல் உறுப்பு தானத்திற்கான ஒருங்கிணைப்புக்கு உதவவும் கட்டணமில்லா எண் 1800114770  செயல்படுகிறது. www.notto.mohfw.gov.in  என்ற இணையதளமும் இதற்கென செயல்படுகிறது.

ஆண்டுதோறும் இந்திய உடல் உறுப்பு தான தினத்தை (ஐஓடிடி) கொண்டாடுவது, கருத்தரங்குகள், பயிலரங்குகள், விவாதங்கள், விளையாட்டு நிகழ்வுகள், நடைப்பயிற்சி, மாரத்தான்கள் போன்ற பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அச்சு ஊடகங்களில் விளம்பரம், சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் தகவல்களை பரப்புதல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன.

இறந்த ஒருவரது இதயம், 2 நுரையீரல்கள், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கணையம், குடல் போன்ற உயிர் காக்கும் முக்கிய உறுப்புகளையும், கருவிழிகள், தோல், எலும்பு மற்றும் இதய வால்வுகள் போன்றவற்றையும் தானம் செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம்,  இறந்த நன்கொடையாளர் 8 உயிர்களைக் காப்பாற்றவும்,  பலரின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடியும்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

SM/ANU/PLM/RS/KPG

 



(Release ID: 1945914) Visitor Counter : 213


Read this release in: English , Urdu , Telugu