பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி 20 அமைச்சர்கள் மாநாடு காந்திநகரில் இன்று தொடங்கியது
Posted On:
02 AUG 2023 8:51PM by PIB Chennai
குஜராத் மாநிலம் காந்திநகரில் மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி-20 அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கியது. 2023 ஆகஸ்ட் 2 முதல் 4 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி 20 மற்றும் விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பாலின சமத்துவ அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரியக் குடியரசு, சவுதி அரேபியா, துருக்கியே, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 15 ஜி20 நாடுகளிலிருந்தும், பங்களாதேஷ், மொரீஷியஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 விருந்தினர் நாடுகளிலிருந்தும் 138 க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தியாவின் ஜி 20 தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா; மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி; இந்தோனேசியாவின் மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி ஐ குஸ்தி அயு பின்டாங் தர்மவதி; பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் மகளிர் மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் திருமதி மரியா ஹெலனா குவாரெஸி; இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு. இந்தேவர் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.
மகளிர் மேம்பாடு குறித்த அமைச்சர்கள் மாநாட்டில், பிரதமர் திரு . நரேந்திர மோடி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை சுருக்கமாக எடுத்துரைத்தார்: " மகளிர் செழிக்கும்போது, உலகம் செழிக்கும். அவர்களுக்குப் பொருளாதார அதிகாரமளித்தல், வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, அவர்களுக்குக் கல்வி கற்பித்தல் உலகளாவிய முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது, அவர்களின் தலைமைத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்தை ஊக்குவிக்கிறது, அவர்களின் குரல்கள் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.” என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது, பெண்கள் தலைமையிலான அணுகுமுறை வளர்ச்சிக்கான வாழ்க்கைப்பாதை அடிப்படையில் கவனம் செலுத்தும் பகுதியாக உருவெடுத்துள்ளது, இது பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதில் இருந்து மாற்றம் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
ஏற்கனவே ஆறு தனிப்பட்ட மாநாடுகள், 86 மெய்நிகர் சர்வதேச கூட்டங்களில் 18 ஜி20 நாடுகள் மற்றும் 7 விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த 300 க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தற்போது அமைச்சர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளை, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினார்.
அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இருதரப்பு கூட்டங்களில், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 1.4 மில்லியன் அங்கன்வாடி மையங்களில் உள்ள வளரிளம் பெண்கள் உள்பட சுமார் 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து சேவைகளை கண்காணிப்பதற்கான ஒரு நிர்வாக கருவியாக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான ஐ.சி.டி தளமான போஷன் டிராக்கருக்கு ஜி 20 நாடுகள் பாராட்டு தெரிவித்தன.
அமைச்சர்கள் மாநாட்டில், இந்திய தலைமையின் கீழ் நடைபெற்ற முந்தைய ஜி20 கூட்டங்களுடன், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகள், சுற்றுலாக்கள் மற்றும் உணவு வகைகளின் தொகுப்பு இடம்பெற்றது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சமூகத் தலைவர்கள், கைவினைஞர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் காட்சிப்படுத்தினர்.
அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய தொழில் கூட்டமைப்புடன் (சிஐஐ) இணைந்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை, மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தொடங்கிவைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக் கலந்து கொண்டனர். 'India@75: பெண்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில், கைவினையில் பெண்கள்; ஆரோக்கியத்தில் பெண்கள்; வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெண்கள்; ஸ்டெம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள்; ஊட்டச்சத்து மற்றும் உணவில் பெண்கள்; கல்வி மற்றும் திறமையில் பெண்கள்; விளையாட்டில் பெண்கள்; பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கண்காட்சி நடைபெற்றது.
***
ANU/AD/SMB/AG/GK
(Release ID: 1945352)
Visitor Counter : 164