சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு: இறுதி அறிக்கை- 5 வது சுற்று
தமிழ்நாட்டின் ஆனைமலை மிகச் சிறந்தது என வகைப்படுத்தப்பட்டுள்ளது
Posted On:
29 JUL 2023 2:31PM by PIB Chennai
இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (ஐ.யூ.சி.என்) பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்த உலக ஆணையத்தின் கட்டமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு (எம்.இ.இ) என்பது புலிகள் காப்பகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலப்பரப்பின் மேலாண்மை கண்ணோட்டங்களுக்கு உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் மிக முக்கியமான கருவியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்கள் உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு மாதிரிகளாக உள்ளன. இது பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் மனிதர்களின் நல்வாழ்வுக்குமான இடத்தை வழங்குகிறது. இவை இயற்கை சார்ந்த சுற்றுலாவின் முக்கிய இடங்களாகவும் உள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்.டி.சி.ஏ), இந்திய வனவிலங்கு நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ) ஆகியவை 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இணைந்து நடத்தும் எம்.இ.இ தேசிய புலிகள் பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றிகரமான மதிப்பீட்டிற்கு வழிவகுத்துள்ளது.
புலிகள் காப்பகங்களின் ஐந்து சுற்றுகளை திறம்பட முடித்த உலகின் ஒரே நாடு இந்தியாவாகும். இது 18 மாநிலங்களில்75,796.83 சதுர கி.மீ பரப்பளவில் 53 புலிகள் காப்பகங்களின் வலையமைப்பை அறிவித்துள்ளது. இவற்றில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் 2022 ஆம் ஆண்டில் புலிகள் காப்பகங்களின் ஐந்தாவது சுற்றில் எம்.இ.இ செயல்முறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 51 புலிகள் காப்பகங்களை மதிப்பீடு செய்வதற்காக 10 சுயேச்சையான பிராந்திய நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன.ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் மற்றும் 2-3 உறுப்பினர்கள் இருந்தனர் (வனவிலங்கு மேலாண்மையில் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், குறிப்பாக புலிகள் காப்பகம் / பாதுகாக்கப்பட்ட பகுதி மேலாண்மை துறையில்). கூடுதலாக, இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (டபிள்யூ.ஐ.ஐ) பேராசிரியர் ஒருவர் இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்கினார். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக, சுயேச்சையான வல்லுநர் குழுக்கள், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின்படி எம்.இ.இ.யை நடத்துவதற்காக அனைத்து 51 புலிகள் காப்பகங்களுக்கும் சென்று கள இயக்குநர்கள் சமர்ப்பித்த ஆதரவு ஆவணங்களை சரிபார்த்த பின்னர் எம்.இ.இ மதிப்பெண் அட்டையை நிரப்பினர்.
அதிகபட்ச மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் முடிவுகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தபட்டன. 50-59% 'சுமார் ' என்று மதிப்பிடப்படுகிறது; 60-74% 'நன்று' என்று மதிப்பிடப்படுகிறது; 75-89% 'மிகவும் நன்று'என்றும், > = 90%"சிறந்தது" என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் காப்பகங்களின்5வது சுழற்சியின் போது கணிசமான முன்னேற்றம் (அதிக மதிப்பெண்கள் அதாவது > = 90%) இடமளிப்பதற்காக இந்த வகைகளில் சிறிய மாற்றம் மற்றும் "சிறந்தது" என்ற வகை அறிமுகப்படுத்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் புலிகள் காப்பகங்களின் ஐந்தாவது சுழற்சியின் முடிவுகள் 51 புலிகள் காப்பகங்களுக்கு ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 78.01% (50% முதல் 94% வரை) என்பதைக் குறிக்கின்றன.
மொத்தம் 12 புலிகள் காப்பகங்கள் 'சிறந்தது' பிரிவிலும், 21 புலிகள் காப்பகங்கள் 'மிக நன்று' பிரிவிலும், 13 புலிகள் காப்பகங்கள் 'நன்று' பிரிவிலும், 5 புலிகள் காப்பகங்கள் 'சுமார்' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் தமிழ்நாட்டின் ஆனைமலை மிகச் சிறந்தது என்றும், முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு- முண்டந்துறை ஆகியவை மிக நன்று என்றும், ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை ஆகியவை நன்று என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கார்பெட் புலிகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே விரிவான அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முதலமைச்சர் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சக இணை அமைச்சர் திரு அஜய் பட் ஆகியோரும் பங்கேற்றனர்.
****
AP/SMB/DL
(Release ID: 1943949)
Visitor Counter : 182