பிரதமர் அலுவலகம்

ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை

Posted On: 28 JUL 2023 9:53AM by PIB Chennai

மேதகு தலைவர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே,

நமஸ்காரம்!

வணக்கம்!

வரலாறும் பண்பாடும் நிறைந்த சென்னைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்! யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தைக் காண உங்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதன் மனம்கவரும் கற்சிற்பங்கள் மற்றும் சிறந்த அழகு கொண் இது, "கட்டாயம் பார்க்க வேண்டிய" இடமாகும்.

 

நண்பர்களே,

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டித் தொடங்குகிறேன். சிறப்பிற்குரிய மகான் திருவள்ளுவர் கூறுகிறார்:நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.” இதன் பொருள், "தண்ணீரை மேலே ஈர்த்த மேகம், அதை மழை வடிவில் திருப்பித் தராவிட்டால், பெருங்கடல்கள் கூட சுருங்கிவிடும்". இந்தியாவில், இயற்கையும் அதன் வழிகளும் வழக்கமான கற்றல் ஆதாரங்களாக உள்ளன. இவை பல ஆன்மீக நூல்களிலும் வாய்மொழி மரபுகளிலும் காணப்படுகின்றன.

ஆறுகள் தண்ணீரை தாமே குடிப்பதில்லை, மரங்கள் பழங்களை தாமே உண்பதில்லை, தண்ணீர் ஓடைகள் அறுவடை செய்வதில்லை, மகான்களின் புகழ் வார்த்தைகள் மற்றவர்களின் நன்மைக்காகவே என்பதை நாம்  கற்றுக்கொண்டோம். இயற்கை நமக்கு வழங்குகிறது. இயற்கைக்கும் நாம் வழங்க வேண்டும். பூமித் தாயைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமை நீண்ட காலமாக பலரால் புறக்கணிக்கப்பட்டதால் இன்று இது "பருவநிலை நடவடிக்கை" என்ற வடிவம் எடுத்துள்ளது. இந்தியப் பாரம்பரிய அறிவின் அடிப்படையில், பருவநிலை நடவடிக்கை "கடைகோடி மனிதரையும்" அடைய வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.  அதாவது, சமூகத்தில் கடைசி நபரின் எழுச்சியையும் வளர்ச்சியையும் நாம் உறுதி செய்ய வேண்டும். பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் குறிப்பாக வளரும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. "ஐநா பருவநிலை உடன்படிக்கை" மற்றும் "பாரிஸ் உடன்படிக்கை" ஆகியவற்றின் கீழ் உறுதிமொழிகள் மீது மேம்பட்ட நடவடிக்கை தேவை. வளரும் நாடுகளின் வளர்ச்சி விருப்பங்களை உகந்த பருவநிலை முறையில் நிறைவேற்ற உதவுவதில் இது முக்கியமானதாக இருக்கும்.

நண்பர்களே,

"தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்" என்ற தனது லட்சியத்தின் மூலம் இந்தியா வழிநடத்தப்படுகிறது என்று சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். 2030 ஆம் ஆண்டின் இலக்கை விட ஒன்பது ஆண்டுகள் முன்னதாக, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து நிறுவப்பட்ட மின்சார திறனை இந்தியா அடைந்துள்ளது. மேலும், புதுப்பிக்கப்பட்ட எங்கள் இலக்குகள் மூலம் நாங்கள் இன்னும் அதிகமாக இலக்கு அளவை அமைத்துள்ளோம். இன்று, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனின் அடிப்படையில், உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் என்ற இலக்கை எட்டவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, சி.டி.ஆர்.ஐ மற்றும் "தொழில் மாற்றத்திற்கான தலைமைத்துவ குழு" உள்ளிட்ட கூட்டணிகள் மூலம் எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைக்கிறோம்.

நண்பர்களே,

இந்தியா மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல்லுயிர் பாதுகாப்பு, பேணுதல், மறுசீரமைப்பு, செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளோம். "காந்திநகர் செயலாக்க வரைபடம் மற்றும் மேடை" மூலம், காட்டுத் தீ மற்றும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட முன்னுரிமை நிலப்பரப்புகளில் மறுசீரமைப்பை நீங்கள் ஏற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது புவிகோளின் ஏழு வகையான புலிகளைப் பாதுகாப்பதற்காக இந்தியா அண்மையில் "சர்வதேச புலிகள் கூட்டணியை" அறிமுகப்படுத்தியது. இது, முன்னோடி பாதுகாப்பு முன்முயற்சியான புலிகள் பாதுகாப்பு இயக்கத்திடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டது. புலிகள் பாதுகாப்பு இயக்கத்தின் விளைவாக, இன்று உலகில் உள்ள புலிகளில் 70% இந்தியாவில் காணப்படுகின்றன. சிங்க பாதுகாப்பு இயக்கம், டால்பிஃன் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்ந்த பணிகளிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

 நண்பர்களே,

இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்களிப்பால் இயக்கப்படுகின்றன. "அம்ரித் சரோவர் இயக்கம்" ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ் ஓராண்டில் அறுபத்து மூன்று யிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கம் முற்றிலும் சமூக பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. எங்கள் "மழை நீரை சேமிப்போம்" இயக்கமும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரை சேமிக்க, இரண்டு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இந்த இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஏறத்தாழ இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மறுபயன்பாட்டு மற்றும் மீண்டும் நீர்நிரப்பும் திறனுடன் கூடிய கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மக்களின் பங்களிப்பு மற்றும் உள்ளூர் மண் மற்றும் நீர் நிலைமைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் சாதிக்கப்பட்டன. கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக "நமாமி கங்கை இயக்கத்தின்" சமூகப் பங்களிப்பையும் நாங்கள் திறம்பட பயன்படுத்தியுள்ளோம். இது ஆற்றின் பல பகுதிகளில் கங்கை டால்பிஃன் மீண்டும் தோன்றும் ஒரு பெரிய சாதனைக்கு வழிவகுத்துள்ளது. சதுப்புநிலப் பாதுகாப்பில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பனளித்துள்ளன. எழுபத்தைந்து சதுப்பு நிலங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசியாவிலேயே மிகப் பெரிய ராம்சார் தளங்களின் வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது.

நண்பர்களே,

நமது பெருங்கடல்கள் உலகெங்கிலும் உள்ள மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுகின்றன. அவை ஒரு முக்கியமான பொருளாதார வளமாகும். குறிப்பாக "சிறிய தீவு நாடுகளை", நான் "பெரிய பெருங்கடல் நாடுகள்" என்று அழைக்க விரும்புகிறேன். அவை விரிவான பல்லுயிர் பெருக்கத்தின் தாயகமாகவும் உள்ளன. எனவே, கடல் வளங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் மேலாண்மை மிக முக்கியமானது. "நிலையான மற்றும் நெகிழ்திறன் கொண்ட நீல மற்றும் கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கான ஜி20 உயர் மட்டக் கொள்கைகள்" ஏற்கப்படுவதை நான் எதிர் நோக்குகிறேன். இந்த சூழலில், பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர ஒரு பயனுள்ள சர்வதேச சட்ட-பிணைப்பு நடைமுறைக்கு ஆக்கப்பூர்வமாக பணியாற்றுமாறு ஜி20-ஐ நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு, ஐ.நா. தலைமைச்செயலாளருடன் இணைந்து, லைஃப் என்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை நான் தொடங்கி வைத்தேன்.  சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை ஓர் உலகளாவிய வெகுஜன இயக்கமாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பேணுவதற்கும் தனிப்பட்ட மற்றும் கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும். இந்தியாவில், எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது உள்ளாட்சி அமைப்போ சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை கவனிக்காமல் இருக்கமுடியாது. அண்மையில் அறிவிக்கப்பட்ட "பசுமைக் கடன் திட்டத்தின்" கீழ் இப்போது அவர்கள் பசுமைக் கடன்களைப் பெற முடியும். இதன் மூலம் மரம் நடுதல், நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயம் போன்ற நடவடிக்கைகளால் தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிறர் வருவாயை ஈட்ட முடியும்.

நண்பர்களே,

 

நான் உரையை நிறைவு செய்யும்போது, இயற்கை அன்னைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்துவிடக் கூடாது என்பதை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். இயற்கை அன்னை பிளவுபட்ட அணுகுமுறையை ஆதரிக்கமாட்டாள் என்பதோடு. "வசுதைவ குடும்பகம்" - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதையே விரும்புவாள். பயனுள்ள மற்றும் வெற்றிகரமான கூட்டத்திற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

நமஸ்காரம்!

   

 

   

***

ANU/LK/SMB/RJ



(Release ID: 1943624) Visitor Counter : 167