சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம்
Posted On:
25 JUL 2023 5:08PM by PIB Chennai
முதல் விரிவான தேசிய கணக்கெடுப்பின் தகவல்கள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 372 பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நஷா முக்த் பாரத் அபியான் எனப்படும் போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
நஷா முக்த் பாரத் அபியான் (என்.எம்.பி.ஏ) எனப்படும் போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் 2020 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது, தற்போது 372 மாவட்டங்களில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு மாவட்டத்திலும் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மத்தியில் போதைப்பொருள்களின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இதுவரை, களத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், 3.34 கோடி இளைஞர்கள் மற்றும் 2.22 கோடி பெண்கள் உட்பட, 10.47 கோடி மக்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் இல்லா இந்தியா இயக்கம் தொடர்பான தேசிய இணையதள உறுதிமொழி இயக்கத்தில் 99,595 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1.67 கோடி மாணவர்கள் போதைப்பொருள் தவிர்ப்பு குறித்து உறுதிமொழி எடுத்துள்ளனர்.
வாழும் கலை, பிரம்ம குமாரிகள் மற்றும் சந்த் நிரங்கரி மிஷன் போன்ற ஆன்மீக மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இந்த இயக்கம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இத்தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. நாராயணசாமி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(Release ID: 1942582)
Visitor Counter : 126