ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டப் பயனாளிகள்
Posted On:
25 JUL 2023 2:28PM by PIB Chennai
கிராமப்புறங்களில் "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடைவதற்காக, 2024 மார்ச் மாதத்திற்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய, 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதற்கான இலக்குடன் தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 2016 ஏப்ரல் 1 முதல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (பி.எம்.ஏ.ஒய்-ஜி) எனப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2.95 கோடி வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான இலக்காக மொத்தம் 2.92 கோடி வீடுகளைக் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 19.07.2023 நிலவரப்படி 2.41 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
2011-ஆம் ஆண்டு சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பின் (எஸ்.இ.சி.சி, 2011) கீழ் நிர்ணயிக்கப்பட்ட வீட்டுவசதி அளவீடுகளின் அடிப்படையில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிராம சபையின் முறையான சரிபார்ப்பு மற்றும் மேல்முறையீட்டு செயல்முறைகளுக்குப் பிறகு, கிராம பஞ்சாயத்து வாரியாக நிரந்தர பட்டியல் (பி.டபிள்யூ.எல்) தயாரிக்கப்படுகிறது. 19.07.2023 நிலவரப்படி, மொத்தம் 2.04 கோடி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு பி.டபிள்யூ.எல் எனப்படும் நிரந்தர காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பி.எம்.ஏ.ஒய்-ஜி எனப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டக் கண்காணிப்பு என்பது தரவுகளைப் பயன்படுத்தி பணிகளின் முன்னேற்றத்தைப் பதிவு செய்வதன் மூலம் செய்யப்படுகிறது.
ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய அளவிலான கண்காணிப்பு அமைப்பு, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் திட்டங்களின் செயலாக்கத்தை வழக்கமாக மதிப்பீடு செய்கிறது.
இத்தகவலை மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(Release ID: 1942473)