குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

Posted On: 23 JUL 2023 4:51PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த மகத்தான நாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

 

இது எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் மறக்க முடியாத தருணம். இது அடிக்கடி நிகழாது. நூற்றாண்டு பட்டமளிப்பு விழா என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் அரிதாகவே வரக்கூடும்.

 

நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவின் இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பார்ந்த மாணவர்களே, ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதை நீங்கள் மறந்துவிட்டால், உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே தடையாக இருப்பீர்கள். உங்கள் வெற்றிக்கு, உங்களது விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை காரணமாக இருந்தாலும், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள்.

 

2022-ம் ஆண்டில் பத்ம விருதைப் பெற்ற துணைவேந்தர் பேராசிரியர் நஸ்மா அக்தர், ஜாமியா பல்கலைக்கழத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் பெண்களுக்கு என்றும் முன்னுதாரணமாக இருப்பார்.

 

நாட்டின் மூன்று சிறந்த பல்கலைக்கழகங்களில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. இது ஒரு தொடர்ச்சியான பணி. இந்தப் பல்கலைக்கழகம் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வளர்ச்சிப் பாதையில் செல்வதில், முன்னாள் மாணவர் சங்கங்கள் பெரும் பலமாக உள்ளன. சொல்லப்போனால், ஒரு நிறுவனம் அல்லது ஒரு தேசத்தின் வளர்ச்சியில் பல்வேறு நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களை விட அதிக ஈடுபாடு கொண்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. கல்வி முக்கியம். ஆனால் கல்வியை சமூக வளர்ச்சியுடன் இணைப்பது  அதைவிட முக்கியமானது.

 

தேசிய கல்விக் கொள்கை 2020 நமது இளைஞர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. கற்றலில் மகிழ்ச்சியைத் தருகிறது, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து கல்வியை உருவாக்குகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டின் சில பகுதிகளில் இக்கொள்கையைப் பின்பற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

 

நண்பர்களே, மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் மாற வேண்டியது அவசியம். எனவே இந்த அமிர்த காலத்தில், திறமை மிகுந்த நமது  மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வழங்குபவர்களாக வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரை பின்பற்ற வலியுறுத்துகிறேன்.

 

பட்டம் பெற்ற என் இளம் நண்பர்களே, நீங்கள் உங்கள் விருப்பமான தொழில்களில் அடியெடுத்து வைக்க வேண்டும். நமது தேசம் மற்றும் சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. நாட்டின்  வளர்ச்சி தடுக்க முடியாதது. மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழும் பாரதத்தின் வளர்ச்சிப் பாதை, இளைஞர்களின் பங்களிப்புகளால் எப்போதும் எழுச்சிப் பாதையில் இருக்கும்.

 

நண்பர்களே, பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. நண்பர்களே, உள்கட்டமைப்புத் துறையாக இருந்தாலும், தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும், செயலாக்கமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக உள்ளது.

 

ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் என்பது உரையாடல் மட்டுமே. இடையூறுகள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுதான் நமது ஜனநாயகம் செழிக்க ஒரே வழி.

 

நண்பர்களே, பட்டம் பெறும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்,  வரும் ஆண்டுகளில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் தொடர்ந்து அதிக உயரங்களை அடையட்டும்.

 

ஜெய் ஹிந்த்!

***

MS/CR/DL



(Release ID: 1941925) Visitor Counter : 100


Read this release in: English , Urdu , Hindi , Assamese