வேறுபாடுகளைக் களைந்து உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளவும், ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் உலகளாவிய நல்வாழ்வுக்காக செயல்படவும் மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்வு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜி 20 நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜி 20 அறிவியல் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், நமது காலத்தின் சிக்கலான சவால்களை எதிர்கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வின் முக்கியத்துவத்தை இந்தியா அங்கீகரிக்கிறது என்றார்.
புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் கூட்டு ஞானம், நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஜி20 நாடுகளை உள்ளடக்கிய, சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சியில் சிறந்து விளங்க ஒரு வலுவான நிகழ்ச்சி நிரலுடன் முன்னேற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
பல உறுப்பு நாடுகள் அவற்றின் தேசிய அறிவியல் படிநிலையில் மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகையில், கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் போது செய்ததைப் போல, இந்தக் குழு மிகப்பெரிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஜி 20 தலைமையின் போது, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அவர் கூறினார்.
சமீப காலமாக, விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் முதல் நானோ தொழில்நுட்பம் என பல துறைகளில் அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களில் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னணியில் உள்ளனர். இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வரும் சவால்களுடன் உலகம் போராடி வருவதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை திறமையாகப் பயன்படுத்துவது இன்றியமையாததாகிறது. ஜி-20 உறுப்பினர்கள் நமது நிகர பூஜ்ஜிய இலக்குகளுக்கு உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும், நிலையான வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார், மேலும் சமீபத்திய ஆண்டுகளில் சூரிய மற்றும் காற்றாலை மின் நிறுவுதல்களில் உலகம் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். எரிசக்தித் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வழிகளைக் கண்டுபிடித்து உருவாக்க நமது விஞ்ஞானிகள் அயராது உழைத்து வருகின்றனர், அதை தூய்மையானதாகவும், மலிவானதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறார்கள் என அமைச்சர் கூறினார்.
சூறாவளி, சுனாமி, நிலச்சரிவு, காட்டுத் தீ போன்ற பல்வேறு இயற்கை அபாயங்களைக் கணிக்கவும் கண்காணிக்கவும் ஜி-20 சமூகம் மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். இந்த தொழில்நுட்பங்களின் தயாரிப்புகளை G-20 க்கு வெளியே உள்ள நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1937440
----
(Release ID: 1937440)
SM/PKV/KRS