பாதுகாப்பு அமைச்சகம்
காட்டுப்பள்ளியில் உள்ள எல் & டி துறைமுகத்தில் 'சன்ஷோதக்' என்னும் நான்காவது ஆய்வுக் கப்பல் துவக்கம்
Posted On:
13 JUN 2023 5:39PM by PIB Chennai
இந்திய கடற்படைக்காக எல்&டி / ஜிஆர்எஸ்இ-யால் கட்டப்பட்டு வரும் ஆய்வு கப்பல் திட்டத்தின் நான்கு கப்பல்களில் நான்காவது கப்பல் 'சன்ஷோதக்' இன்று சென்னை காட்டுப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் முதன்மை நீரியலாளர் வைஸ் அட்மிரல் ஆதிர் அரோரா கலந்து கொண்டார். கடற்படையின் கடல்சார் மரபுக்கிணங்க, திருமதி தன்வி அரோரா அதர்வண வேத மந்திரத்தை ஓதி கப்பலை துவக்கி வைத்தார். 'ஆராய்ச்சியாளர்' என்று பொருள்படும் 'சன்ஷோதக்' என்று பெயரிடப்பட்ட கப்பல், முதன்மையான ஆய்வுக் கப்பலாக செயல்படும்.
நான்கு ஆய்வுக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம், கொல்கத்தா கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) இடையே 2018 ம் ஆண்டு அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. கட்டுமான உத்தியின்படி, முதல் கப்பல் கொல்கத்தாவில் கட்டப்பட்டு மீதமுள்ள மூன்று கப்பல்களின் கட்டுமான அலங்கார நிலை வரை, எல்&டி ஷிப் பில்டிங், காட்டுப்பள்ளிக்கு துணை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் மூன்று கப்பல்களான சந்தயாக், நிர்தேஷாக் மற்றும் இக்ஷாக் ஆகியவை முறையே 2021 டிசம்பர் 5, 2022 மே 26 மற்றும் 2022 நவம்பர் 26 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட்டன.
ஆய்வுக் கப்பல்கள், கடல்சார் தரவுகளை சேகரிக்க, புதிய தலைமுறை ஹைட்ரோகிராஃபிக் கருவிகளுடன், தற்போதுள்ள சந்தயாக் கிளாஸ் சர்வே கப்பல்களை மாற்றும். இந்த ஆய்வுக் கப்பல்கள் 110 மீ நீளம், 16 மீ அகலம் மற்றும் 3,400 டன் எடை கொண்டது. இந்தக் கப்பல்கள், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டிஎம்ஆர் 249-ஏ எஃகு மூலம் தயாரிக்கப்பட்டது.
நான்கு ஆய்வு மோட்டார் படகுகள் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த ஹெலிகாப்டரை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட கப்பல்களின் முதன்மைப் பங்கு, துறைமுகங்கள் மற்றும் வழிசெலுத்தல் வழிகளில் முழு அளவிலான கடலோர மற்றும் ஆழமான பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதாகும். பாதுகாப்பு மற்றும் சிவில் பயன்பாடுகளுக்கு கடல்சார் மற்றும் புவி இயற்பியல் தரவுகளை சேகரிப்பதற்காக கப்பல்கள் பயன்படுத்தப்படும். அவசர காலங்களில் மருத்துவமனைக் கப்பலாகவும் செயல்பட முடியும்.
நான்காவது ஆய்வுக் கப்பலின் தொடக்கம், 'மேக் இன் இந்தியா' மற்றும் 'தற்சார்பு இந்தியா ' என்ற அரசின் திட்டங்களின் ஒரு பகுதியாக, உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தில் நமது உறுதியை வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932038
***
AP/PKV/GK
(Release ID: 1932092)
Visitor Counter : 203