வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உலக நாடுகளால் இந்தியா, பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 24 MAY 2023 1:57PM by PIB Chennai

கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எழுச்சிப்பெற்று உருவெடுத்துள்ள இந்தியா, உலக நாடுகளால் தற்போது, பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், புதுமை கண்டுபிடிப்பு, தரம் மற்றும் திறமை ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு வானமே  எல்லை என்று அவர் கூறினார்.

இந்தியாவுடன் பல்வேறு நாடுகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தற்போது ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்தார். கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவை இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும், இது உலகில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று அவர் கூறினார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது என்று  அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், பிரதமர் திரு நரேந்திர மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக, கற்பனைக்கு எட்டாத மாற்றங்களும். வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும், குறைந்த பணவீக்கம் கொண்ட நாடாகவும், வலுவான அந்நிய செலாவணிக் கையிருப்புக் கொண்ட நாடாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நிதியாண்டில் 776 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது என்றும், இது பாராட்டத்தக்க சாதனை எனவும் அவர் கூறினார். ஒரு ட்ரில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் சேவை ஏற்றுமதி என்ற இலக்கை எட்டும் நோக்கில் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

AP/PLM/RS/KRS

******



(Release ID: 1926983) Visitor Counter : 121