குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அரசியலமைப்பு பதவிகளில் உள்ள அதிகாரிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - குடியரசு துணைத்தலைவர்
Posted On:
22 MAY 2023 5:18PM by PIB Chennai
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற கேரள சட்டமன்றக் கட்டடமான நியாமசபாவின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், அரசியலமைப்புப் பதவிகளில் உள்ள அதிகாரிகள் கண்ணியமான நடத்தை கொண்டிருக்க வேண்டுமெனக் கூறினார்.
பல சிக்கலான பிரச்சினைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் கையாண்ட அரசியல் நிர்ணய சபையிலிருந்து உத்வேகம் பெறுமாறு திரு.தன்கர் சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். ஜனநாயக விழுமியங்களை மலரச் செய்வதற்கு, பயனுள்ள சட்டமன்றச் செயல்பாடுகள் அவசியம் எனவும் திரு.ஜெகதீப் தன்கர் சுட்டிக் காட்டினார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றத்தின்போது புத்திசாலித்தனம், நகைச்சுவை மற்றும் கிண்டல் ஆகியவை மறைந்து வருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அதனை மீட்டெடுக்க வேண்டும் எனவும் குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.
கேரள சட்டமன்றக் கட்டடத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் வேளையில், கேரள மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், கேரள மாநிலம் அதன் முற்போக்குச் சிந்தனை மற்றும் சமூக நீதிக்காக பெயர் பெற்றதென புகழாரம் சூட்டினார். நாட்டிலேயே அதிக இணைய பயன்பாடு கொண்டிருப்பதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்காவும் கேரள மாநிலத்தைப் பாராட்டிய குடியரசுத் துணைத்தலைவர், கேரளாவின் மனித வளமும், அதன் முற்போக்கான பணிக் கலாச்சாரமும் இணைந்து ஆட்சியில் புதிய பாதைகளை உருவாக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கேரள ஆளுநர் திரு.ஆரிப் முகமது கான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குடியரசுத் துணைத்தலைவராகப் பதவியேற்ற பிறகு, திரு.ஜெகதீப் தன்கர் கேரளாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 'கடவுளின் தேசத்தில்' இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார். 2023 மே 21 அன்று கேரளாவுக்கு வந்த குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கருடன் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்று, அனைவரின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்தார்.
******
(Release ID: 1926290)
AD/CR/KRS
(Release ID: 1926439)
Visitor Counter : 171