வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பெல்ஜியம் நாட்டில் இந்திய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் முதலாவது அமைச்சகங்கள் அளவிலான கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

Posted On: 14 MAY 2023 11:13AM by PIB Chennai

இந்திய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் முதலாவது அமைச்சகங்கள் அளவிலான கூட்டம் மே 16-ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஆகியோருடன் இணைந்து மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக துணைத் தலைவர்கள் திரு டாம்ப்ரோவ்ஸ்கிஸ் மற்றும் திருமிகு வெஸ்டாகெர் கூட்டத்திற்குத் தலைமை ஏற்பார்கள். வர்த்தகம், நம்பகத்தன்மை வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக உயர்நிலை அளவில் ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லெயன் ஆகியோர் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் உருவாக்கத்தை கடந்த ஏப்ரல் 2022-இல் புதுதில்லியில் அறிவித்தார்கள்.

 

மே 15-ஆம் தேதி திரு டாம்ப்ரோவ்ஸ்கிஸ் உடன் அமைச்சர் திரு கோயல் இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார். அதைத்தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் வர்த்தக தலைவர்களின்  முன்னிலையில் பங்குதாரர்களுடன் மூன்றாவது பணிக் குழு ஆலோசனைக் கூட்டத்திலும் அமைச்சர் பங்கேற்பார். வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் நெகிழ்தன்மை மிக்க விநியோக சங்கிலிகள் பற்றி பணிக்குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். பெல்ஜியம் நாட்டில் உள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பால் மதியம் நடத்தப்படும் விழாவில் திரு பியூஷ் கோயல் முக்கிய உரை நிகழ்த்துவார். இந்தியாவில், பெல்ஜியம் நிறுவனங்களின் முதலீடு சம்பந்தமான விசயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இது தவிர மூன்று இந்திய அமைச்சர்களும் பெல்ஜியம் நாட்டின் பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை சந்தித்துப் பேசுவார்கள்.

 

டிஜிட்டல் ஆளுகை மற்றும் இணைப்பு குறித்த பணிக்குழு கூட்டத்திலும், தூய்மையான மற்றும் பசுமையான எரிசக்தி தொழில்நுட்பங்கள் சார்ந்த மற்றொரு பணிக்குழுக் கூட்டத்திலும் மே 16-ஆம் தேதி அமைச்சர் திரு ‌கோயல் பங்கேற்று பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவார். இதைத்தொடர்ந்து, உள்நாட்டு வர்த்தகத்திற்கான ஐரோப்பிய ஆணையர் திரு தியரி ப்ரெட்டான் உடன் அமைச்சர் இருதரப்பு பேச்சு வார்த்தையை நடத்தி, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, புத்தொழில் சூழலியல் மற்றும் மின்னணு வர்த்தகம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசிப்பார். இதன் பிறகு இந்திய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தொழில்நுட்ப கவுன்சிலின் முதலாவது அமைச்சகங்கள் அளவிலான கூட்டத்தில் மூன்று மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்.

***

AD/RB/DL



(Release ID: 1924005) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Marathi , Hindi