கலாசாரத்துறை அமைச்சகம்
2வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டம் ஒடிசாவின் புவனேஸ்வரில் நாளை தொடங்குகிறது
Posted On:
13 MAY 2023 5:20PM by PIB Chennai
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மே 14 முதல் 17-ம் தேதி வரை 2-வது கலாச்சார பணிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஜி-20 உறுப்பினர்கள், நட்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கலாச்சாரத் துறை எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இக்கூட்டம் வாய்ப்பளிக்கிறது.
இந்தியாவின் ஜி-20 தலைமையில் கலாச்சார பணிக்குழு கூட்டங்கள் 4 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. அவை, கலாச்சாரச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு; நிலையான எதிர்காலத்திற்காக பாரம்பரியத்தை பயன்படுத்துதல்; கலாச்சாரம் மற்றும் புதுமைகள் நிறைந்த தொழில்களை மேம்படுத்துதல்; கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகும்.
மே 14-ம் தேதி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் பத்மஸ்ரீ விருது பெற்ற சுதர்சன் பட்நாயக் அவர்களால் நேர்த்தியான மணல் சிற்பம் உருவாக்கப்படவுள்ளது. இந்த சிற்பத்தின் கருப்பொருள் ‘கலாச்சாரம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது’ என்பதாகும். இதை கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜி. கிஷன் ரெட்டி, கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் இதனைத் தொடங்கி வைக்கவுள்ளனர்.
யுனெஸ்கோ பாரம்பரிய தளமான கோனார்க் சூரியன் கோயில், உதயகிரி குகைகள் போன்ற பாரம்பரிய தளங்களை பிற நாட்டுப் பிரதிநிதிகள் பார்வையிடவுள்ளனர். மேலும், ஒடிசா மாநிலத்துக்குரிய நடன நிகழ்ச்சிகளான சம்பல்புரி, ஒடிசி மற்றும் கோட்டிபுவா போன்றவற்றையும் அவர்கள் கண்டுகளிக்கவுள்ளனர்.
2வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா கைவினை அருங்காட்சியகத்தில் கைவினப்பொருட்கள் கண்காட்சியை வரும் 15-ம் தேதி ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக் தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சி 2023 மே 16 முதல் 22 வரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.
****
AD/CR/DL
(Release ID: 1923926)
Visitor Counter : 141