விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு தோமர் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் 8-வது கூட்டம்

Posted On: 12 MAY 2023 4:55PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் 8-வது கூட்டம், காணொலி காட்சி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியாவுடன், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் தலைமையில் ஷாங்காய் அமைப்பு உறுப்பு நாடுகள், பொலிவுறு வேளாண் திட்டத்தை ஏற்று கொண்டுள்ளன. இந்த கூட்டத்தில் பேசிய திரு நரேந்திர சிங் தோமர், வேளாண் துறையில் புத்தாக்கங்களை உள்ளடக்கிய பொலிவுறு வேளாண் திட்டம் திருப்தி அளிப்பதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி தொழில்நுட்பங்களின் மூலம் செயல்படுத்தப் பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளுடனான உறவுகள் குறித்து எடுத்துரைத்த அமைச்சர், இருதரப்பு அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களுடனான கலந்துரையாடல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது குறித்தும் விளக்கினார். தற்போதைய சூழ்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றார். இன்றைய சூழலில் உணவு விநியோக சங்கிலியை இயல்பு நிலையில் பராமரிக்க வேண்டும் என்றும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான தொடர்பும், ஒத்துழைப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

2013-14 முதல் கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி 5 மடங்கு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் உணவு தானிய உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிப்பு, வேளாண் மற்றும் அதனைச்சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி ஆகியவை ரூ.4 லட்சம் கோடியை தாண்டியிருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமரின் விவசாயிகள் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருவதை குறிப்பிட்ட அமைச்சர் இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 2.40 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதையும் நினைவுகூர்ந்தார். கோடிக் கணக்கான விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உணவு பாதுகாப்பு மற்றும் மண் வளத்தை பாதுகாக்கும் இயற்கை வேளாண்மையை அரசு முன்னிறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு 10,000 புதிய வேளாண் உற்பத்தி அமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கேட்டு கொண்டார்.

 

***

AD/ES/AG/KPG


(Release ID: 1923795) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Marathi