அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

முதன்முறையாக வழங்கப்படும் இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற பேராசிரியர் ஜெயந்த் விஷ்ணு நார்லிகர்

Posted On: 12 MAY 2023 3:46PM by PIB Chennai

சிறந்த வானியலாளரும், புனேவிலுள்ள ஐயுசிஏஏ-வின் நிறுவன இயக்குனரும், இந்திய வானியல் கழகத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ஜெயந்த் வி. நர்லிகர், முதன்முறையாக வழங்கப்படும் இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐஐடி இந்தூரில் நடைபெற்ற இந்திய வானியல் கழகத்தின்(ஏஎஸ்ஐ) 41-வது கூட்டத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பேராசிரியர் நர்லிகரால் அப்போது அதனைப் பெற இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, ஏஎஸ்ஐ தலைவர் பேராசிரியர் தீபாங்கர் பானர்ஜி, புனேவில் பேராசிரியர் நர்லிகரை நேரில் சந்தித்து விருதை வழங்கிப் பாராட்டினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் பானர்ஜி, “பேராசிரியர் ஸ்வரூப்பும், பேராசிரியர் நர்லிகரும் பணியாற்றிய தளங்கள் வெவ்வேறு என்றாலும், இருவரும் நாட்டின் வானியல் மற்றும் வானியற்பியல் துறையின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். இளைய தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டினர். இருவரும் வருங்கால தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வர்” என்றார்.

2022-ம் ஆண்டில் பொன்விழாவைக் கொண்டாடிய இந்திய வானியல் கழகம், இந்தியாவின் வானியல் மற்றும் வானியற்பியல் துறைக்குப் பங்களித்த புகழ்பெற்ற இந்திய வானியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில்,  கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தது. பேராசிரியர் கோவிந்த் ஸ்வரூப்பின் (1929-2020) நினைவாக இந்த விருது அவரது  பெயரில் வழங்கப்படுகிறது.  புனேவில் உள்ள தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தின் (என்சிஆர்ஏ) நிறுவன இயக்குநராக இருந்த கோவிந்த் ஸ்வரூப், பேராசிரியர் வி.ஜி.பிடேவுடன் இணைந்து உருவாக்கிய அறிவியல் கல்வி நிறுவனங்களுக்கான கட்டமைப்பு, தற்போது நாடு முழுவதும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாக வடிவம் பெற்றுள்ளது.

 

---

 

 

AD/CR/PG

 


(Release ID: 1923713) Visitor Counter : 204